டாக்கா: டி20 உலகக்கோப்பை தொடர் இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற ஐசிசி குழுவில் இடம் பெற்ற இந்திய வம்சாவளி அதிகாரிக்கு விசா வழங்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பிப்ரவரி 7-ம் தேதி டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன. இதில் வங்கதேச அணி தனது லீக் போட்டிகளை கொல்கத்தா மற்றும் மும்பையில் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்திய மண்ணில் விளையாட மாட்டோம் என்றும், தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்றும்படியும் வங்கதேசம் பிடிவாதம் பிடித்து வருகிறது.
இந்த விவகாரம் ஐசிசிக்கு கடும் தலைவலியை தந்துள்ள நிலையில் இந்தப் பிரச்னையைத் தீர்த்து, வங்கதேசத்தை இந்தியாவிற்கு வர சம்மதிக்க வைப்பதற்காக ஐசிசி ஒரு உயர்மட்டக் குழுவை டாக்காவிற்கு அனுப்பத் திட்டமிட்டது. இந்தக் குழுவில் ஐசிசி-யின் மூத்த அதிகாரி ஒருவர் இடம் பெற்றிருந்தார். அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவருக்கு வங்கதேச அரசு விசா வழங்க மறுத்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் டாக்காவிற்குச் செல்ல முடியவில்லை. இதன் விளைவாக, ஐசிசியின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் தலைவரான ஆண்ட்ரூ எஃப்கிரேவ் மட்டும் தனி நபராக டாக்கா சென்றுள்ளார்.
வங்கதேச அணி கொல்கத்தா மற்றும் மும்பையில் விளையாட மறுத்தால், சென்னை அல்லது திருவனந்தபுரத்தில் போட்டிகளை நடத்த ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆலோசித்து வருகின்றன. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் கேரள கிரிக்கெட் சங்கமும் போட்டிகளை நடத்தத் தயார் என்று ஒப்புதல் கூறி உள்ளன. தனியாகச் சென்றுள்ள ஆண்ட்ரூ எஃப்கிரேவ், வங்கதேச கிரிக்கெட் வாரியம் மற்றும் அந்நாட்டு விளையாட்டு அமைச்சக அதிகாரிகளைச் சந்தித்துப் பேசவுள்ளார். இந்தியாவில் வங்கதேச வீரர்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்ற உறுதியையும், அதற்கான விரிவான பாதுகாப்புத் திட்டத்தையும் அவர் சமர்ப்பிக்க உள்ளார்.
