அன்பு காதல் காமம் இந்த மூன்று வார்த்தைகளும் அற்புதமான அர்த்த புஷ்டியான வார்த்தைகள். இந்த வார்த்தைகள் ஆன்மிகத்திலும் லௌகீகம் என்று சொல்லப்படும் உலகியலிலும் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகள். இந்த வார்த்தைகளின் சாரமான பொருள் சில நேரங்களில் ஒரே மாதிரியாகவும், சில நேரங்களில் இடத்தைப் பொறுத்து வேறு வேறு அர்த்தங்கள் வரும்படியும் கையாளப்படுகிறது.இந்த வார்த்தைகளின் வித்தியாசங்களையும் ஒற்றுமைகளையும் நம்முடைய ஆன்மிகவாதிகள் (ஆழ்வார்கள், நாயன்மார்கள் இறை அருள் கவிஞர்கள்) எப்படி எல்லாம் கையாளுகிறார்கள் என்பதை கவனிக்கும் பொழுது மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருக்கும்.
முதலில் அன்பு என்ற வார்த்தையை எடுத்துக் கொள்வோம்.உலகில் அன்பு என்பது பொதுவான வார்த்தை. அன்புள்ள அப்பா என்று தந்தையைச் சொல்லலாம். அன்புள்ள மகன் என்று தந்தை மகனைச் சொல்லலாம். எந்த உறவுகளுக்கும் பயன்படுத்தக்கூடிய பொதுவான வார்த்தை அன்பு. அன்பு என்பது உயிர்களுக்கு வேண்டிய அவசியமான அடிப் படையான உணர்ச்சி. இது ஒரு வலுவான, நேர்மறை அனுபவம்; மனித உறவுகளின் அடித்தளம்; அனைத்து மதங்களும் வலியுறுத்தும் அடிப்படை; வள்ளுவர் ‘‘அன்பிற்கும் உண்டோ அடைக் குந்தாழ்?’’ என வியக்கும் ஓர் உன்னத உணர்வு, இது சுயநலமற்ற, தியாகம் நிறைந்த, எல்லையற்ற அர்ப்பணிப்பையும் குறிக்கும். ஏதோ ஒன்று எதிர்பார்த்து ஒருவரிடம் செலுத்துவது அன்பு அல்ல. எதையும் எதிர்பார்க்காமல் செலுத்தப்படும் அல்லது ஏற்படும் உணர்ச்சி தான் அன்பு.
அன்பு என்னும் உணர்ச்சியால் தான் இந்த உலகம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மனிதர்கள் மனிதர்களாக இருக்கிறார்கள். வள்ளல் பெருமான் ‘‘ஆருயிர்கட்கெல்லாம் அன்பு செயல் வேண்டும்’’ என்று வேண்டுகிறார். அவ்வளவு ஏன்?
அன்பு வேறு; இறைவன் வேறு அல்ல என்பதை அன்பே சிவம் என்று சொல்லால் குறிப்பிடுவார்கள். இறைவனிடத்திலே அன்புள்ளவர்களை அடியார்கள் என்றும், இறையடியார்களிடத்திலே அன்பு உள்ளவர்களை அடியார்க்கடியார்கள் என்றும் சமய மரபிலே குறிப்பிடுவார்கள். இறைவனை மிக எளிதாக வசப்படுத்துவதற்கு தேவைப்படும் உணர்ச்சி அன்பு. வேறு எந்த பிடிக்கும் அகப்படாத இறைவன், அன்பெனும் பிடிக்கும் அகப்படுகிறான். இதை வள்ளல் பெருமான் ‘‘அன்பெனும் பிடியும் அகப்படும் மலையே’’ என்றார்..அன்பு உடையவர், அன்பு இல்லாதவர் என்று இரண்டு பிரிவாகப் பிரித்து அவர்களுக்குள் உள்ள வேறுபாட்டினை மிகத் தெளிவாக திருவள்ளுவர் வரையறுக்கிறார். அன்பில்லாதவர்கள் எல்லாவற்றையும் தனது என்று நினைப்பார்கள். சுயநலக்காரர்களாக இருப்பார்கள். அன்புடையவர்கள் தம்முடைய உடமையையும் பிறருக்காகப் பயன்படுத்துவார்கள் தங்களுடைய வாழ்க்கையையும் பிறருக்காகப் பயன்படுத்துவார்கள்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்.
என்பும் உரியர் பிறர்க்கு.
என்று அன்புணர்ச்சியின் சிறப்பை
வள்ளுவர் காட்டினார்.
இறைவனை அடைவதற்கு அன்பு என்னும் அகலை கொண்டு
விளக்கேற்றினார் பூதத்தாழ்வார்.
அன்பை அகலாக்கி, ஆர்வத்தை நெய்யாக்கி, சிந்தனையை திரி யாக்கி, பக்தியோடு அவர் ஏற்றிய விளக்கின் ஒளியில் இறைவன் தோன்றினான்.
அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா, – நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.
என்பது அவர் பாட்டு.
‘‘உயிர்களிடத்து அன்பு வேணும் – தெய்வம்
உண்மை என்று தான் அறிதல் வேண்டும்
என்றார் பாரதி.
அன்பின் மற்றொரு சொல் காதல்.
ஆனால் உலகியலில் இந்தச் சொல் சற்று எச்சரிக்கையாகவே கையாளப்படுகிறது.ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நேசிக்கும் பொழுது பிறக்கும் உணர்ச்சி காதல் என்று சொல்லப்படுகிறது. இந்தச் சொல் உலகியலில் பிரத்தியேகமானது. இதுவும் அன்புதான். ஆனால் ஆண் பெண் இருவரும் ஒருவருக்கு ஒருவர் கொண்ட அன்பை காதல் என்று சொல்லால் தான் குறிப்பிடுகின்றனர்.ஆகையினால் அன்பின் பிரத்தியேகமான பயன்பாட்டுச் சொல்லாக காதல் என்று சொல்லை எடுத்துக் கொள்ளலாம்.ஒரு காதலன் காதலியிடத்தில் கொண்ட அன்பைப் போலவே இறைவனிடம் ஆன்மாக்கள் செலுத்தும் அன்பும் காதல்தான். இதைத்தான் சமயப் பெரியவர்கள் பக்தி என்று சொன்னார்கள். இறைவனிடத்தில் கொண்ட காதல் பக்தி என்று குறிப்பிடப்படுகிறது.
‘‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்குய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயமே’’
என்பது ஞானசம்பந்தர் தேவாரம்.
இறைவனிடத்திலே கொண்ட அன்புணர்ச்சியை காதல் என்று சொல்லி, எப்படி அன்பு எலும்பையும் உருக்குமோ அப்படி இறைவனுடைய நாமம் மனதை உருக்கும் என்று சொன்னார்கள்.
இதற்கு அடுத்த நாம் பார்க்க
வேண்டியது காமம் என்ற சொல்.
காதல், அன்பு போல காமம் என்ற சொல் சமூகத்தில் மிகவும் எச்சரிக்கையோடு கையாளப்படுகிறது. காமம் என்ற சொல்லுக்கு விருப்பம், இன்பம் வேட்கை என்று பொருள் சொல்லலாம்.காதலனும் காதலியும் அன்பு கொண்டு பழகுகிறார்கள். அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் உடலாலும் இணையும் பொழுது அதை காமம் என்று சொல்லால் குறிப்பிடுகின்றோம். உலகியலில் அன்பின் பலனாகவோ அல்லது அன்பினால் பெறப்படும் இன்ப மாகவோ காமம் என்ற சொல் கையாளப்படுகிறது. ஆனால் பக்தி இலக்கியத்திலும் காமம் என்ற சொல் மிகவும் முக்கியமான சொல்.ஒரு மனிதன் அடைய வேண்டிய நான்கு பொருள்களில் (சதுர்வித புருஷார்த்தம்) மூன்றாவதாக இருப்பது காமம். அறம், பொருள், இன்பம், வீடு என்பதில் மூன்றாவதாக உள்ள இன்பத்தை காமம் என்ற சொல்லால் குறிப்பிட்டார்கள்.
வடமொழியில் இதனை தர்ம அர்த்த காம மோட்சம் என்பார்கள்.காமம் என்கிற உணர்ச்சி உலகியலில் இருந்தால் அது மறுபடி மறுபடி நம்மை பிறவிச் சுழலிலே தள்ளும். இது பக்தியாக மாறி இறைவனிடத்திலே காமம் பெருகும் பொழுது அது அவனை அடைய வைப்பதோடு அவனை அடைந்ததால் பெறுகின்ற பேரின்ப நிலையையும் குறிக்கும். இந்த நிலையை அந்தமில் பேரின்பம் என்று சொல்வார்கள்.
சேமநல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
ஆமது காமம் அறம்பொருள் வீடிதற் கென்றுரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண்மிசையே
(திருவரங்கத்து அமுதனார் – ராமானுச நூற்றந்தாதி-40).
ஆண்டாள் திருப்பாவையில் பகவானைப் பிரார்த்தனை செய் கின்ற பொழுது ‘‘மற்றை நம் காமங்கள் மாற்று’’ என்ற ஒற்றைப் பிரார்த்தனையை வைக்கின்றாள்.மற்ற பொருள்களிலே காமம் ஏற்படுகின்ற பொழுது இறைவனிடத்திலே காமம் ஏற்படுவதில்லை. இறைவனிடத்திலே காமம் ஏற்படும் பொழுது மற்ற உலகியல் பொருள்கள் நமக்கு இன்பத்தை அளிப்பதில்லை. காமம் என்பது ஏதோ ஒரு விதத்தில் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அதனால்தான் ஆண்டாள் காமம் இல்லாத நிலை வேண்டும் என்று சொல்லாமல் மற்ற காமங்களை மாற்றி கண்ணனிடத்திலே காமம் உள்ளவளாக என்னை மாற்று என்று பிரார்த்தித்தாள்.
அன்பினால் அடையும் பயன்தான் காமம்.
அதனை இப்படி சொல்லலாம்.
அன்பு என்பது வழி.
அதனால் அடையும் பயன் (இறை இன்பம்) காமம்.
இப்படிக்கூட சொல்லலாம்.
அன்பு ஆறு. அடையும் பேறு காமம்.
