?எந்த செயல் செய்தாலும் அதில் ஒரு பர்ஃபெக்ஷன் இருக்க வேண்டும் என்கிறார்களே?
– ராமகிருஷ்ணன், சென்னை
இது சாத்தியமில்லாத விஷயம். ஒரு செயலை திரும்பத் திரும்ப செய்யும் பொழுது தான் மெருகு ஏறும். ஆண்டவனே ஒரு அவதாரத்தில் முடியாததால் தான் மறுபடியும் பல்வேறு அவதாரங்களை எடுக்கிறார். இந்த விஷயத்தில் எனக்கு டாக்டர் ந. சுப்புரெட்டியார் சொன்ன ஒரு சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது. அவர் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டு போய் ஒரு பெரிய தமிழ் அறிஞரிடம் காட்டினார். அவர் அதை படித்து விட்டு நீங்கள் இன்னும் நிறைய தகவல்களைச் சேகரித்து, இன்னும் நன்றாக உழைத்து, இந்தப் புத்தகத்தை எழுதி இருக்க வேண்டும் என்றார்.அதற்கு ந.சுப்பு ரெட்டியார் அவர்கள் சொன்ன பதில் வியப்பானது. ‘‘நீங்கள் என்னை புத்தகம் எழுத வேண்டாம் என்பதைத்தான் இப்படி சொல்கிறீர்கள் போல் இருக்கிறது’’ என்று கேட்டுவிட்டுச் சொன்னார். எது ஒன்றுமே முழுமையானதாக இருக்க முடியாது. எனக்குக் கிடைத்த தகவல்களை வைத்துக்கொண்டு இந்த புத்தகத்தை உழைத்து எழுதி இருக்கிறேன். புதிதாக தகவல் கிடைத்தால், அதை அடுத்த பதிப்பில் சேர்த்துக் கொள்கிறேன். அதை விட்டுவிட்டு எனக்கு முழுமையான தகவல்கள் கிடைக்காத வரை, ஒரு புத்தகம் எழுதக்கூடாது என்று சொன்னால், நான் புத்தகம் எழுதுகின்ற வாய்ப்பு என் வாழ்நாளில் ஏற்படாது என்று சொன்னார். மார்க் டிவைன் என்கின்ற எழுத்தாளர் மிக அழகாகச் சொல்வார். நாம் நம்முடைய செயல் களையும் சிந்தனைகளையும் நாளுக்கு நாள் அபிவிருத்தி செய்து கொண்டே போக வேண்டுமே தவிர, நிறைவான நிலை வரட்டும், செய்து கொள்ளலாம் என்று காத்திருப்பது கூடாது என்பார். (Continuous improvement is better than delayed perfection).
?சில பேர் ஓஹோ என்று இருக்கிறார்கள். துன்பமே இல்லாதது போல் வாழ்கிறார்களே.
– சரண்யா, வேலூர்.
உங்களுக்கு அப்படித் தெரிகிறது. தன்னுடைய கஷ்டத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் வாழ்வது என்பது ஒரு கலை. அதற்கு ஒரு பக்குவம் வேண்டும். பெரும்பாலும் வாழ்க்கை தூரத்து பச்சையாகத்தான் இருக்கிறது. ஒரு அருமையான பாடல் இதற்கு விளக்கம் அளிக்கும்.இல்லாத பொருள் மீது எல்லோர்க்கும் ஆசை வரும் இக்கரைக்கு அக்கரை பச்சை -மழை நாளில் உன் கண்கள் வெயில் தேடும்- கோடைவெயில் நாளில் உன் மேனி குளிர் தேடும் அது தேடி இது தேடி அலைகின்றாயைவாழ்வில் எது வந்து சேர்ந்தாலும் தவிக்கின்றாய் தூரத்தில் பார்த்தால் மெழுகுவர்த்தியின் ஒளி மட்டும் தெரியும் அருகில் சென்று பார்த்தால் உருகி கண்ணீர் வடிப்பது புரியும்.
?ஏன் குருவைப் பற்ற வேண்டும்?
– கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்.
குருவருள் இல்லை என்றால் திருவருள் இல்லை. குருவின் துணை இன்றி பிறவிப் பெருங்கடல் நீந்துவது அரிது. குரு பரமாத்மாவை காட்டிக் கொடுக்கிறார். அவனை நம்மால் நேரே பற்ற முடியாது. அவனைப் பற்ற ஒரு பற்று வேண்டும். அவரே குரு (ஆச்சாரியன்). ஆவிக்கோர் பற்றுக் கொம்பு போல அவருடைய அபிமானமே ஆன்மாவுக்கு உத்தாரகம். அருணகிரிநாதர் கந்தர் அனுபூதியில் முருகனை குருவாக வரச் சொல்கிறார்.
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
?இன்று நாம் வாழும் வாழ்க்கைக்கு ஏற்றபடி, அன்று ஏற்படுத்தப்பட்ட சாஸ்திர நெறிகளை ஏன் மாற்றி அமைக்கக் கூடாது? இதற்கு ஏற்ற தகுதி வாய்ந்த ஆசாரிய புருஷர்கள் பலர் இன்றும் இருக்கத்தானே செய்கிறார்கள்… அவர்கள் ஏன் இந்தக் காரியத்தைச் செய்ய முன்வரக் கூடாது?
– எஸ். சித்தையன், குன்னூர்.
சாஸ்திர விஷயங்களில் கொஞ்சம் விட்டுக் கொடுப்பது, கொஞ்சம் மாற்றி அமைப்பது என்று ஆரம்பித்தால், கடைசியில் லௌகிக சௌகரியங்களை மட்டும் வைத்துக் கொள்வதாகத்தான் அது முடியும். வயலில் களை எடுப்பதைப் போல் இவற்றை நீக்கி விட வேண்டும் என்று சிலர் சொல்லுகிறார்கள். இப்போது சிலவற்றைகளை என்று நினைத்து நாம் எடுப்போம். பின்னால் வேறு சிலர் பிறவற்றைக் களை என்று எண்ணி எடுப்பார்கள். இப்படியே போய்க் கொண்டிருந்தால், எது களை என்ற விவஸ்தையே இல்லாமல், வயல் முழுவதுமே போய் விடும். அவனைப் பற்றி நினைத்ததெல்லாம் தவறு என்று எண்ணுகிறாள். அதே வாலிபனும் அதே பெண்ணுமாக இருந்தும்கூட, அன்று இன்ப நினைவுகளாக இருந்தது இன்று துன்ப நினைவுகளாக மாறிவிட்டது. இதற்கு என்ன காரணம்? அவனோ, அவளோ, மாறாவிட்டாலும் அந்த உணர்வு நிலையானதாக இல்லாததால் மாறிவிட்டது. அந்த ஆனந்தம் நிலையாக இருந்திருந்தால் மாறி இருக்காது. இறைவனிடம் கொள்ளும் அன்பு நித்தியமானது. அதனால் கிடைக்கும் ஆனந்தமும் நித்தியானந்தம்தான். இப்படி நித்தியமானதாக இருப்பதனாலேயே அதன் தூய்மையும் பெருமையும் மிக உயர்ந்தது; தெய்விகமான அந்த உணர்வு மனிதர்களுைடய எல்லைகளையும், மனித வாழ்வையும் கடந்தது. அதில் பிரதி பலனை யாரும் எதிர்பார்க்கவில்லை. ‘எல்லாவற்றையும் உனக்கே கொடுத்து விட்டேன்!’ என்ற தியாக உணர்வே அதில் நிறைந்திருக்கிறது. தியாகேசுவரனான இறைவன் அதையே காணிக்கையாக ஏற்றுக் கொள்ளுகிறான்.
?இயற்கை அழிவுகளுக்கு காரணம் கோள்களின் இயக்கமா?
– சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.
நிச்சயமாக. அதிலென்ன சந்தேகம்? சமீபத்தில் நடந்த நிலநடுக்கம், காட்டுத்தீயால் ஏற்பட்ட பேரழிவு போன்ற நிகழ்வுகள் எல்லாமே கிரஹங்களின் சஞ்சாரத்தால் உண்டாகும் நிகழ்வுகள் தான். புதுவருடம் பிறக்கும்போது பஞ்சாங்க படனம் என்ற பெயரில் ஆலயங்களில் பஞ்சாங்கம் படிப்பார்கள். அப்போது அந்த வருடத்தின் கிரஹ நிலையைக் கொண்டு அந்த வருடத்தில் நிகழ உள்ள இயற்கை சீற்றங்கள் குறித்தும் மழையின் அளவு குறித்தும் சூசகமாகச் சொல்வார்கள். இதுபோக பஞ்சாங்கத்திலேயே இந்த பகுதிகளில் காட்டுத்தீ, நிலநடுக்கம், புயல் மழை உண்டாகும் போன்ற விவரங்களைக் கொடுத்திருப்பார்கள். இந்த விவரங்கள் அனைத்தும் கிரஹங்களின் சஞ்சார நிலையினை அடிப்படையாகக் கொண்டே கணிக்கப்படுகின்றன.
?உடலில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டமா?
– கே.எம். ஸ்வீட்முருகன், கிருஷ்ணகிரி.
மச்சக்குறி சாஸ்திரம் என்ற நூல் இது குறித்த விவரத்தினைத் தெரிவிக்கிறது. இதன் மூலம் அதிர்ஷ்டம் என்று நீங்கள் கருதும் நேர்மறைப் பலன்கள் மட்டுமல்ல ஒரு சில மச்சங்கள் எதிர்மறையான பலனைத் தருவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே போல ஆண்களுக்கு ஒரு விதமாகவும் பெண்களுக்கு ஒரு விதமாகவும் மச்சக்குறி சாஸ்திரம் பலன் சொல்கிறது. ஆனால் அறிவியல் ஜோதிடம் என்பது இதனை ஏற்கவில்லை.
