×

மின்னல் கொடி அம்பிகையாய் வந்தருளும் நாமம்

தடில்லதா சமருசி: ஷட்சக்ரோபரி ஸம்ஸ்திதா

இந்த நாமங்களினுடைய முழு அர்த்தத்தையும் பார்ப்பதற்கு முன்னால், தத்துவார்த்தமாக முன்னுரையாக சில விஷயங்களையும் பார்க்க வேண்டும். இதற்கு முன்பு நாம் சில விஷயங்களை பார்த்திருக்கிறோம். பிரம்மமானது தன்னை இரண்டு நிலைகளில் வெளிப்படுத்திக் கொள்கிறது. ஒன்று சிவம் என்கிற நிலையிலேயும், இன்னொன்று சக்தி என்கிற நிலையிலேயும் வெளிப்படுத்திக் கொள்கிறது. சிவசக்தி ரூபமாக வெளிப்படும்போதுதான் இந்த பிரபஞ்ச சிருஷ்டிகளெல்லாம் நடக்கின்றது. அதற்குப் பிறகு சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோதாணம், அனுக்கிரகம் என்று சொல்லக் கூடிய பஞ்ச கிருத்தியங்கள் நடக்கின்றன. இந்த சிருஷ்டிக்கு காரணமாக இருக்கக் கூடிய அந்த சிவசக்தி சொரூபம்தான், முக்தி என்று சொல்லக் கூடிய அனுக்கிரகத்தையும் நமக்குச் செய்ய முடியும் என்றெல்லாம் நாம் பார்த்திருக்கிறோம். இந்த சிவசக்தி சொரூபம் சிருஷ்டியாக வெளிப்படும்போது, சிவம் என்பது தன்னை நாதமாக, ஒலியாக (sound) வெளிப்படுத்திக் கொள்கிறது. அது பிரம்மத்தினுடைய ஒரு வெளிப்பாடு. அதே பிரம்மம் தன்னை சக்தியாக வெளிப் படுத்திக் கொள்ளும்போது பிந்துவாக ஒளியாக (light) வெளிப்படுத்திக் கொள்கிறது என்று பார்த்தோம்.

இந்த ஒளியாக light வெளிப்படுத்தும்போது அர்த்தப் பிரபஞ்சம், அல்லது ரூபப் பிரபஞ்சம். இதற்கு அடுத்து ஒலியாக வெளிப்படுத்துவது என்பது சப்தப் பிரபஞ்சம் அல்லது நாமப் பிரபஞ்சம். இதன் மூலமாகத்தான் சிருஷ்டி நடக்கின்றது. இந்த சிருஷ்டி முழுக்க என்ன என்று கேட்டால் நாம ரூபம். நாம ரூபத்திற்கு அடிப்படை என்ன எனில், சப்தமும் அர்த்தமும். சப்தத்திற்கும் அர்த்தத்திற்கும் அடிப்படை என்னவெனில், ஒலியும் ஒளியும் – light and sound – நாதம் – பிந்து. இந்த நாத பிந்துவிற்கு அடிப்படை என்னவெனில், சிவமும் சக்தியும். சிவசக்தி என்னவெனில் ஒன்றேயான பிரம்ம வஸ்து. இன்னொரு முறை அப்படியே ஏறு வரிசையில் இதே விஷயத்தைப் பார்ப்போம் வாருங்கள். அப்படி ஒன்றேயான பிரம்ம வஸ்து, சிவ சக்தியாக இரண்டாக வந்து, நாத பிந்துவாக வந்து, ஒளி மற்றும் ஒலியாக வந்து, சப்தப் பிரபஞ்சம் அர்த்தப் பிரபஞ்சமாக வந்து, நாம பிரபஞ்சம் ரூப பிரபஞ்சமாக வந்து நாம் இப்போது அனுபவிக்கக் கூடிய சிருஷ்டியாக நடந்திருக்கிறது.

ஒரு புத்தகத்தை எடுத்து கண் முன்னால் வைத்தால், அந்த புத்தக என்கிற ரூபம் கண்ணில் பட்டவுடனே அந்த நாமத்தோடு அதை தொடர்புபடுத்தி அது புத்தகம் என்று சொல்கிறோம். ஒருவரை பார்த்தவுடன் அந்த ரூபத்தோடு தொடர்பு ஏற்பட்டு அதற்குரிய நாமம் தெரியவருகிறது. புத்தகம் என்கிற வார்த்தை இருகிறதல்லவா அது சப்தப் பிரபஞ்சம். அந்த வார்த்தைக்கான அர்த்தமாக இருக்கிற புத்தகம் என்பது அர்த்தப் பிரபஞ்சம். இவை இரண்டும் இப்படி நடக்கிறது. ஒரு சிறு குழந்தை இருக்கிறது. அது நெருப்பு என்கிற உருவத்தை முதலில் பார்த்துவிட்டது. ஆனால், அதன் பெயர் நெருப்பு என்கிற சப்தம் அதற்கு தெரியாது. முதலில் அர்த்தத்தை தரிசனம் செய்து விட்டது. இப்போது அதை தொட முயற்சிக்கும். அது சுட்டு விட்டால் மீண்டும் முயற்சிக்காது. அதற்குப் பிறகு பெற்றோர் அதற்கு நெருப்பு என்று பெயரைச் சொல்லிக் கொடுப்பார்கள். முதலில் தரிசனம் ஆவது என்னவெனில், அர்த்தப் பிரபஞ்சமாக இருக்கக் கூடிய ரூபம், அதற்கு பிறகுதான் அதனுடைய பெயராக இருக்கக் கூடிய சப்தமான பெயர் தெரிய வந்தது. இதை நாம் எதற்கு வேண்டுமானாலும் சொல்லலாம்.

ஒரு குழந்தை பசித்தால் அழும். அம்மா உணவு கொடுப்பார்கள். தாகம் எடுத்தால் அழும். அம்மா நீர் கொடுப்பார்கள். பசித்தால் பால் கொடுப்பார்கள். அம்மா கொடுக்கின்ற அந்த வஸ்துவிற்கு பேர் பால் என்றோ… உணவு என்றோ… நீர் என்றோ… முதலில் அந்தக் குழந்தைக்கு தெரியாது. அதற்குப் பிறகு இந்த வஸ்து உள்ளே சென்று இந்த வஸ்து பசி என்கிற உணர்வை தணிக்கின்றது என்று தெரிந்தவுடன், கொஞ்சம் விவரம் தெரிந்தவுடன் இந்த வஸ்துவிற்கு பால். இந்த வஸ்துவிற்கு உணவு என்கிற விஷயமும் தெரிய வரும். முதலில் அந்த குழந்தைக்கு அர்த்தப் பிரபஞ்சமான ரூபத்தைப் பார்த்து விட்டு, அதிலிருந்து சப்தப் பிரபஞ்சத்திலிருந்து அந்த நாமத்தை தெரிந்து கொள்கிறது. பிறந்தவுடனே அந்தக் குழந்தைக்கு முதலில் தெரியக் கூடியது அம்மா மட்டும்தான். அந்த அம்மாவையும் எப்படி தெரியுமெனில், அர்த்தப் பிரபஞ்சமாகத்தான் தெரியும். அதற்குப் பிறகுதான் அந்த உருவத்திற்கு அம்மா என்று தெரிய வரும். நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையுமே, நாம ரூபத்திற்கு இடையிலேதான் இந்த மொத்த சிருஷ்டியுமே நடந்து கொண்டிருக்கிறது. இப்போது இந்த நாம ரூபங்கள்தான் சிவசக்தியாக வருகின்றது என்று சொல்கிறோம்.

இப்போது நாம் ஏன் குழந்தையினுடைய உதாரணத்தை பார்த்தோம். குழந்தை ஒவ்வொரு பொருளாக தெரிந்து கொள்கிறது. இதற்கு மூல காரணமான, அம்மா மூலமாகத்தான் தெரிந்து கொள்கிறது. அதற்கு மூலமான அம்மாவின் ரூபம். பிறகு அம்மாவின் நாமம். இதேபோல இந்த சிருஷ்டி என்கிற சுழற்சி யிலிருந்து வெளியே செல்ல வேண்டுமெனில், இதனுடைய ரகசியம் நமக்கு தெரிய வேண்டும். அப்போது இதற்கெல்லாம் காரணமான சக்தி சொரூபத்தை தெரிந்து கொண்டால் எல்லாவற்றையும் பற்றி தெரிந்து கொள்ளலாம். பிரம்மம் தன்னை சக்தியாக வெளிப்படுத்திக் கொள்வதற்கும், ஒரு முக்கியமான காரணம் அந்த அனுக்கிரகம். அந்த கருணை என்று சொல்கிறோம். ஏனெனில், சிவன் என்கிற ஞானம் சத்தியமானது. இதை நேரடியாக அறிந்து கொள்ள முடியாது. சக்தியால்தான் அறிந்து கொள்ள வேண்டும். அம்பாள் வழியாகத்தான், அம்பாளின் காருண்யம் வழியாகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.
சிவம் என்பது சப்தம். ஒலி. சக்தி என்பது ஒளி. ரூப பிரபஞ்சம். அந்த light தான் அம்பாளாக இருக்கிறாள். அந்த ஒளியாக இருக்கக்கூடிய சக்திதான் நம்மீது காருண்யமாக இருக்கிறது. இதனால்தான் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்கிறார்.

அருட்பெருஞ்சோதியாக எந்த சக்தி வெளிப்படுத்திக்கொள்ளுமோ, அந்த சக்திதான் நம்மீது தனிப் பெருங் கருணை வைக்கும். தனிப் பெருங்கருணையை பிடித்துக் கொண்டால், அருட்பெருஞ்சோதியாக இருக்கக் கூடிய சக்தியை பிடிக்கலாம். சக்தியை பிடித்தால், சக்தி மூலமாக ஞானமாக இருக்கக் கூடிய சிவத்தை பிடிக்கலாம். பிறகு நம்முடைய சொரூபம் தெரிகிறது.இப்போது நமக்கு தெரியக் கூடிய உருவ வெளிப்பாட்டிலிருந்துதான் எல்லாமே தொடங்குகிறது. உருவத்திலிருந்துதான் நாமத்திற்கு போகிறோம். நாம – ரூபங்களுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கக் கூடிய தத்துவத்தைத் தெரிந்து கொள்கிறோம். இப்போது முக்கியமான விஷயம் என்னவெனில், நாம் எப்போது உருவம் என்று ஒன்றை பார்க்கிறோமோ அது அம்பாள்தான். கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போய் சிவலிங்கத்தை தரிசிக்கலாம். கற்பகாம்பாளை தரிசிக்கலாம். முருகனை தரிசிக்கலாம். பெருமாளை தரிசிக்கலாம். விநாயகரை தரிசிக்கலாம். நம்முடைய குருவை தரிசிக்கலாம். எதை தரிசனம் செய்தாலும் எப்போது form என்று, அதாவது உருவமைப்பு வந்து விட்டதோ அது அம்பாள். அது சக்தி. ஏனெனில், நமக்கு இந்த formஐ கொடுத்ததே அம்மாதானே. சக்திதானே. அதேமாதிரி எல்லா form க்கும் அவதானே அம்மா.

அந்த அம்பாள் தன்னை இப்படி வெவ்வேறு ஒளியாக வெளிப்படுத்துவதைத்தான் அம்பாளின் தசமஹா வித்யா சொரூபங்கள் ஆகும். இப்போது இவ்வளவு முன்னுரை கொடுப்பதற்கு காரணம் என்னவெனில், அந்த light என்பதன் highest form எது? நாம் பார்க்கக்கூடிய உலகில் இருப்பது எது? சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை தாண்டி நாம் பார்க்கக் கூடிய உயர்ந்ததொரு ஓளி – light இருக்கிறது. ஆனால், அதை அவ்வளவு எளிதாக நம்மால் உணரவோ அல்லது பெற்றுக் கொள்ளவோ அல்லது தாங்கவோ முடியாது. சூரியனை நாம் ஒளியாக பார்த்து உணர முடியும். அப்படி இருக்கிற உயர்ந்ததொரு நிலையிலுள்ள ஒளி (highest form light) எது எனில் மின்னல் ஆகும். ஆங்கிலத்தில் அப்படியே அதை lightning என்றே பெயர் வைத்து விட்டார்கள். ஒளியை அப்படியே பெயராக வைத்து விட்டார்கள். இந்த lightning என்பது imperceivable form . நம்மால் பார்க்க முடியும். ஆனால், மற்ற சூரியனையோ அல்லது சந்திரன் போலவே தொடர்ந்து பார்க்க முடியாது. ஒரு வினாடி வந்தாலும் சரிதான். அது அவ்வளவு வலிமையாக இருக்கும்.

இப்படி ஒரு கணமாக இருந்தாலும் கருணையாக இறங்கி வருவதால் அம்பாளுக்கு தடில்லதா சமருசி என்று சஹஸ்ரநாமம் வர்ணிக்கின்றது.தடில்லதா என்றால் மின்னல் கொடி. தடித் என்றால் மின்னல். லதா என்றால் கொடி. தடில்லதா என்றால் மின்னல் கொடி. சமருசி என்று வசின்யாதி வாக் தேவதைகள் சொல்கிறார்கள். மின்னல்பற்றி பேசும்போது ருசி என்று taste பற்றி சொல்வார்களா. இனிமையைப்பற்றி பேசினால் ருசி என்று சொல்லலாம். மின்னலைப்பற்றி பேசினால் ஏன் ருசி என்று சொல்ல வேண்டுமென்றால், imperceivable ஆக இருக்கக் கூடிய ஒரு வினாடி, perceive ஆகும்போது ருசி வரும். அந்த ருசி என்ன ருசி தெரியுமா? இதற்கு முந்தைய நாமத்திலேயே பார்த்து விட்டோம். அதுவே ஸுதா ஸாராபி வர்ஷிணீ என்கிற அந்த அமுத ருசி.இதற்கு முன்பு பார்த்த நாமத்தை நாம் இங்கு தொடர்புபடுத்த வேண்டும், இப்போது அதை அப்படியே கற்பனைக்கு கொண்டு வந்தால், மேகம் திரண்டு அப்படியே மழை பொழிகிறது. அந்த மழை பொழிவது ஸுதா ஸாராபி வர்ஷிணீ. அந்த மழை பொழியும்போது அந்த அமுதப் பிரவாஹத்தை இவன் அனுபவிக்கிறான். ஆக, இந்த அமுதப் பிரவாஹத்திற்கான காரணம் என்ன? இந்த அமுதப் பிரவாஹம் எங்கிருந்து நடக்கிறது என்று நினைக்கும்போது இவனுக்கு ஒரு வினாடி ஒரு மின்னல் வெட்டுகிறது.

நாம் நல்ல மழை பொழியும்போது நாம் அதனடியில் நின்று கொண்டு அனுபவிக்க வேண்டும். இந்த மழை பொழியும்போது ஆனந்தமாக இருக்கிறதே இந்த ஆனந்தத்திற்கு காரணம் என்ன? என்று கேள்வி வரும்போது மின்னல் வெட்டுகிறது. மின்னல் எதனால் வெட்டுகிறது? மேகங்களால் வெட்டுகிறது. அந்த மேகங்களிலிருந்துதான் மழை பெய்கிறது. மேகங்கள் உரசும்போது இடி சத்தம். அந்த மேகங்கள் உரசும்போது ஏற்படுகின்ற மின்னல் என்று சொல்லக் கூடிய அர்த்தப் பிரபஞ்சம். அந்த மின்னலை வெட்டும்போது நமக்கு எல்லாமே தெளிவாகின்றது. இப்போது வரிசையாக ஒவ்வொன்றாக புரிந்து கொள்வோம் வாருங்கள்.

இந்த மேகம். மேகத்திலிருந்து பொழியக் கூடிய மழை. அந்த மேகம் உரசும்போது ஒரு இடி சப்தம் எழுகின்றது. அந்த இடி சத்தம் என்று சொல்லக் கூடிய சப்தப் பிரபஞ்சம். மேகங்கள் உரசும்போது வரக்கூடிய மின்னல் என்று சொல்லக் கூடிய அர்த்தப் பிரபஞ்சம் என்று எல்லாமே நான்தானப்பா என்று காண்பித்துக் கொடுக்கிறாள். இந்த அனைத்து வஸ்தும் நான் தான். அந்த வஸ்து எப்படி இருக்கிறதெனில் மின்னல் கொடிபோல் சட்டென்று தோன்றுவது போல் இருக் கிறது. ஆனால், கருணையினால் நம்மால் ஒரு கணம் சட்டென்று ஒளிர்கின்றதைபோல் இருக்கிறது. இப்படிப்பட்ட உண்மையினை நமக்கு காண்பிப்பதற்குத்தான் தடில்லதா சமருசி என்று வர்ணிக்கிறார்கள். அந்த அனுபவம்தான் நமக்கு ருசியாகும். அந்த இடி முழக்கம் சப்த பிரபஞ்சத்தையும், சிவத் தன்மையையும், இந்த மின்னல் என்று சொல்லக் கூடியது சக்தி தன்மையினையும் காண்பித்துக் கொடுக்கிறது.

இங்கு பிரம்மத்தை நாம் லலிதாவாக சக்தியாக சொல்வதால், வசின்யாதி வாக் தேவதைகள் ஒளியாக மின்னலாக தடில்லதா சமருசி என்று சொல்கிறார்கள். இந்த இடிமுழக்கம் என்பது சப்த பிரபஞ்சத்தை காண்பிக்கிறது என்பதாலேயே பிரகதாரண்ய உபநிஷதத்தில் தம் தம் தம் என்று இடி முழங்கி தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் மூவருக்கும் உபதேசம் செய்ததாக ஒரு கட்டம் வரும். இன்றைக்கும் வைஷ்ணவ சம்பிரதாயத்தில் நாம் பகவானைச் சொல்லும்போது வாசுதேவர், சங்கர்ஷணர், பிரத்யும்னர், அநிருத்தர் என்று நான்கு வகையாக நான்கு நிலைகளில் பகவானைப் பிரிப்போம். இந்த வியூக மூர்த்திகளையெல்லாம் கடந்து பரமபதத்தில் இருக்கிறார் அல்லவா? அவருக்கு பரவாசுதேவன் என்று பெயர். அந்த பரவாசுதேவனுடைய சொரூபம் என்ன என்று சாஸ்திரம் சொல்லிக் கொடுக்கிறது. பரவாசுதேவனுடைய சொரூபம் மின்னல் கொடி போன்றது என்று சொல்லிக் கொடுக்கிறது.

ஏனெனில், மின்னலுடைய அந்த intensity இருக்கிறதல்லவா? அது அவ்வளவு அதிகமாக இருக்கிறது. இப்படி இவ்வளவு வலிமையாக இருக்கக் கூடிய இந்த மின்னலில் ஒளியானது, எங்கேயோ இருக்கிறது என்று நினைக்கும்போது குரு அனுக்கிரகத்தினால் பெரிய revelation கிடைக்கிறது. இது எங்கேயோ எல்லாம் இல்லை என்பதற்கு இதற்கு அடுத்த நாமாவே நமக்கு பதிலைத் தருகிறது. அதுவே, ஷட்சக்ரோபரி ஸம்ஸ்திதா. இங்கு முந்தைய நாமாக்களில் உள்ள விஷயத்தை கொஞ்சம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த மூலாதாரத்திலிருந்து ஆக்ஞா வரையிலும் இருக்கக் கூடிய ஆறு சக்கரங்களை தாண்டி, ஏழாவதாக இருக்கக் கூடிய சஹஸ்ராரம் இருக்கிறதல்லவா? அந்த சஹஸ்ரார சக்கரத்தில்தான் இந்த மின்னல் கொடி போன்றவள் இருக்கிறாள். ஷட்சக்ரோபரி ஸம்ஸ்திதா என்றால் நமது உச்சந்தலையில் இருக்கக் கூடிய சஹஸ்ராரத்தில் சிவசக்தி ஐக்கிய சொரூபமாகி இருக்கிறாள். ஆறு சக்கரங்களுக்கு மேலாக ஏழாவது ஸ்தானமாக இருப்பதால் ஷட்சக்ரோபரி ஸம்ஸ்திதா என்று பெயர். தடில்லதா சமருசி என்பது அம்பாளின் வெளிப்பாடு.

ஷட்சக்ரோபரி என்று சொல்லக் கூடியது அவளுடைய ஸ்தானம். இன்னொரு முறை புரிந்து கொள்வோமா? தடில்லதா சமருசியாக வெளிப்படுகிறாள். ஷட் சக் என்கிற ஆறு சக்கரங்களுக்கு மேலே இருக்கிறாள். இதுவே ஷட்சக்ரோபரி ஸம்ஸ்திதா என்பதாகும். இவ்வளவு intense ஆக இருக்கிறதே நம்மால் perceive பண்ண முடியுமா என்று நினைக்க வேண்டிய அவசியமில்லை. இந்த சரீரத்தின் மூலமாகவே, இந்த மனசின் மூலமாகவே , இந்தப் பிராணன் மூலமாகவே இந்த ஷட் சக்கரங்களின் வழியாக யோக, ஞான, பக்தி போன்ற சாதனைகளினால், இந்த ஆறு சக்கரங்களை கடந்து ஏழாவது ஸ்தானத்தில் அவருடைய ஸ்தானம் இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறோம். இந்த ஷட்சக்ரோபரி ஸம்ஸ்திதா என்கிற இந்த நாமமானது லலிதா சஹஸ்ரநாமத்தில் நூற்றி எட்டாவது நாமமாகும். இதற்கான கோயிலாக மிகவும் ஆச்சரியமாக மின்னல் கொடி என்ற பெயரோடு அம்பாள் அருள்பாலிக்கும் தலம் ஒன்று உள்ளது. அதற்கு திருக்கரவீரம் என்று பெயர். திருவாரூருக்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் உள்ள அம்பாளுக்கு பிரத்யட்ச மின்னொளி அம்மை என்றே பெயர். ஏனெனில், இந்த நாமாவை அப்படியே காட்டும் கோயில் இதுவே ஆகும். திருஞானசம்மந்தர் வரும்போது மேகங்கள் திரண்டு மழை பொழிகிறது. இருளாக இருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் என்ன என்று நினைக்கும்போது ஒரு மின்னல் வெட்டுகிறது. அந்த மின்னலை வைத்து ஓ… இடி நாதத்தை கேட்கிறோம். ஸுதாஸாராபி வர்ஷிணீ என்று அமுதத்தை பொழிகிறாள். இப்படி ஒட்டுமொத்த நாமங்களையுமே இங்கு திருஞானசம்பந்தர் நேராக அனுபவிக்கிறார். இந்த திருக்கரவீரத்தில் இருளும் மழையும் மின்னலுமாக அப்படியே அனுபவிக்கிறார். கோயிலுக்குச் சென்று பாட வேண்டுமென்று செல்லும்போது மழை பெய்கிறது. ஞானசம்பந்த சுவாமிக்கு உள்ளிருக்கும் அம்பாள் ஒரு மின்னலாக காட்சி கொடுக்கிறாள். அந்த ஒளியில் கோயில் தெரிந்து சென்று தரிசனம் செய்கிறார். அதனாலேயே இந்த அம்பாளுக்கு பிரத்யட்ச மின்னொளி அம்மை என்றே பெயர். சிவனுக்கு கரவீர நாதர் என்று பெயர். எனவே, மின்னொளியில் மின்னும் ஞான அம்பிகையை தரிசனம் செய்து வருவோம். இந்த நாமத்தை எப்போதும் சொல்லுவோம்.
(சுழலும்…)

Tags : Thadilatha Samarusi ,Brahma ,
× RELATED கல்வியறிவு பெருக ஒரு பிரார்த்தனை