×

யு.19 ஒரு நாள் உலக கோப்பை தொடர்: முதல் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி: ஹெனில் படேல் அபார பந்துவீச்சு

 

மும்பை: 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நேற்று தொடங்கியது. இதில் `பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா நேற்று தனது முதல் போட்டியில் அமெரிக்காவுடன் மோதியது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய அமெரிக்கா, ஹெனில் படேல் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 107 ரன்னில் சுருண்டது. வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஹெனில் படேல், 16 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் அமெரிக்கா அணியால் 35.2 ஓவர்களை மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. பின்னர் 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 2 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

இந்தியா 4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்திருக்கும்போது வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மழை பெய்தது. இதனால் நீண்ட நேரம் ஆட்டம் தடைபட்டது. மழை நின்றபின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவுக்கு 37 ஓவரில் 96 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வைபவ் சூர்யவன்ஷி (2) வேதாந்த் திரிவேதி (2), ஆயுஷ் மாத்ரே (19), விஹான் மல்ஹோத்ரா (18) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அபிஜியான் கந்து ஆட்டமிழக்காமல் 41 பந்தில் 42 ரன்கள் சேர்க்க இந்தியா 17.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹெனில் படேல் தனது சிறப்பான ஆட்டத்திற்காக `ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.

 

Tags : U.19 One Day World Cup Series ,India ,USA ,Henil Patel ,Mumbai ,50- ,World Cup series ,Zimbabwe ,Namibia ,
× RELATED அமெரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!