- டென்னிஸ்
- ஈவா ஜோவிக்
- ஹோபார்ட் சர்வதேச டென்னிஸ் பெண்கள் ஒற்றையர்
- ஹோபார்ட் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி
- ஹோபார்ட், ஆஸ்திரேலியா
ஹோபார்ட்: ஹோபார்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று, இவா ஜோவிக் அட்டகாச வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் ஹோபார்ட் இன்டர்நேஷனல் மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ரவுண்ட் ஆப் 16 போட்டியில் அமெரிக்க வீராங்கனை இவா ஜோவிக், மெக்சிகோ வீராங்கனை ரெனாடா ஜராஸுவா மோதினர்.
துவக்கம் முதல் ஆக்ரோஷமாக ஆடி ஆதிக்கம் செலுத்திய இவா ஜோவிக், 6-1 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் சிறப்பாக ஆடிய அவர் 6-2 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் போலந்து வீராங்கனை மேக்தா லினெட், சீன வீராங்கனை வாங் ஜிங்யு மோதினர். முதல் செட்டில் சிறப்பாக ஆடிய லினெட் 6-1 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் இருவரும் சளைக்காமல் ஆக்ரோஷமாக மோதினர்.
நீண்ட நேரம் நடந்த அந்த செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் லினெட் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் காலிறுதிக்கு தகுதி பெற்றார். இன்னொரு போட்டியில் குரோஷியாவை சேர்ந்த ஆன்டோனியா ரூஜிக் – அர்ஜென்டினாவில் ஸொலானா சியரா களம் கண்டனர். இப்போட்டியில் இரு வீராங்கனைகளும் விட்டுத் தராமல் புள்ளிகளை எடுப்பதில் முனைப்பு காட்டினர்.
நீண்ட நேரம் பிடித்த முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் ரூஜிக் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் சுதாரித்து ஆடிய அவர் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இன்று நடக்கும் காலிறுதிப் போட்டியில் இவா ஜோவிக் – மேக்தா லினெட் களம் காண உள்ளனர்.
