- பொங்கல்
- தென்காசி
- நெல்லா
- நெல்லா, தென்காசி,
- தூத்துக்குடி மாவட்டம்
- தமிழ்நீலம் பொங்கல் திருவிழா
- தமிழ்நாளம் பொங்கல் திருவிழாக்கள் தினம்
நெல்லை : தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை கொண்டாட காய்கறிகள், பலசரக்கு, வீட்டு உபயோக பொருட்கள் வாங்க நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (15ம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து வெள்ளையடித்து வர்ணம் தீட்டினர். தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு அத்தியாவசிய தேவையான காய்கறிகள், கரும்பு, பனங்கிழங்கு, ஓலை, பச்சரிசி, அச்சுவெல்லம் உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் கடை வீதிகளில் திரண்டு வந்தனர். நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட், நெல்லையப்பர் கோயில் ரதவீதிகள், பாளை. மார்க்கெட் பகுதி, மகாராஜநகர் உழவர் சந்தை, என்ஜிஓ காலனி உழவர்சந்தை, மேலப்பாளையம் உழவர் சந்தை, தச்சநல்லூர், பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகள், பலசரக்கு கடைகள், பூக்கடைகள், நடைபாதைகளில் கடை விரித்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் குலை, பனங்கிழங்கு, கரும்பு கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால் வண்ணார்பேட்டை, சந்திப்பு, தச்சநல்லூர் சந்திமறித்த அம்மன் கோயில் சாலை, பாளை. மார்க்கெட், டவுன், மேலப்பாளையம் சந்தை, டவுன் ரதவீதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனை போக்குவரத்து போலீசார் ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நெல்லை மாநகர பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மாநகர போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் பொருட்கள் வாங்க அலைமோதியது.
நெல்லையில் உள்ள உழவர் சந்தைகளில் தக்காளி கிலோவுக்கு ரூ. 40-43, கத்தரிக்காய் வெள்ளை ரூ.40-46, பச்சை கீரி ரூ.25, வைலட் ரூ.25, வெண்டைக்காய் ரூ.38-40, புடலை ரூ.40-35, சுரைக்காய் ரூ.10, பீர்க்கங்காய் ரூ.40, பூசணி நாடு ரூ.12-15, டிஸ்கோ ரூ.26-28 தடியங்காய் ரூ.16, அவரை ரூ.60, கொத்தவரை ரூ.35, முருங்கை ரூ.260, பல்லாரி ரூ.33-32, சின்னவெங்காயம் ராசிபுரம் ரூ.50-60, வாழைக்காய் ரூ.35, தேங்காய் ரூ.65, வாழை இலை பூட்டு ரூ.30-35, கறிவேப்பிலை ரூ.50, புதினா ரூ.46, மல்லி ரூ.40, இஞ்சி ரூ.68- 70, மாங்காய் நாடு ரூ.50-60, கல்லாமை ரூ.110, ரிங்பீன்ஸ் ரூ.70, உருளை கிழங்கு ரூ.28 -35, கேரட் ரூ.54, சவ்சவ் ரூ.15 – 25, முட்டைகோஸ் ரூ.26, பீட்ரூட் ரூ.30, கருணைகிழங்கு ரூ.50, சேம்பு ரூ.50, சிறுகிழங்கு ரூ.85, சேனை ரூ.40, பிடிகிழங்கு ரூ.60 என விற்பனையானது.
20 எண்ணம் கொண்டு கரும்பு கட்டு ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கரும்பு ரூ. 50 முதல் 60 வரை அளவுக்கு தகுந்தவாறு விற்பனை செய்யப்படுகிறது. 25 எண்ணம் கொண்ட பனங்கிழங்கு ஒரு கட்டு ரூ.100 -125க்கும், 20 கிழங்குகள் கொண்ட கட்டு ரூ.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பழங்களை பொறுத்தவரை கற்பூரவல்லி ரூ.60, செவ்வாழை பழம் ரூ.110, கோழிக்கோடு ரூ.70, ரசகதளி ரூ.40 என விற்பனை செய்யப்படுகிறது.
முன்னீர்பள்ளம் வாரச்சந்தை வெள்ளிக்கிழமை தோறும் கூடுவது வழக்கம். ஆனால் இந்தவாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய், புதன் இருநாட்களும் சந்தை நடக்கிறது.
இங்கும் ஏராளமான காய்கறிகள் கிராமங்களில் இருந்து வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை செய்தனர். பொதுமக்களும் காய்கறிகள், பழங்கள், கரும்பு, பனங்கிழங்கு உள்ளிட்டவைகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். சந்தையில் இன்றும் விற்பனை நடக்கிறது.
போட்டி போட்டு வாங்கினர்
மேலப்பாளையம் சந்தை பகுதியில் 4 கிலோ பல்லாரி ரூ.100க்கும், இரண்டரை கிலோ உள்ளி வெங்காயம் (சின்ன வெங்காயம்) ரூ.100க்கும், மஞ்சள் குலை ரூ.30-50க்கும், பூசனிக்காய், புடலங்காய், சுரைக்காய் சிறியது ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனர்.

