×

உலகளாவிய மலை வழிபாடு

பகுதி 2

ஆண்டெஸ் மலை கடவுள்

தென் அமெரிக்காவின் ஆண்டெஸ் மலைப் பகுதிகளில் பெரு, பொலிவியா போன்ற நாடுகளில் மலையை ஆப்புஸ் (Apus) என்ற பெயரிட்டு அங்கு இருக்கும் காவல் தெய்வங்களான தூய ஆவிகளை வணங்கி வருகின்றனர். ஆப்புஸ் என்றால் தலைவன் அல்லது முதல்வன் (தெய்வம்) என்று பொருள். இங்கு மலைத் தெய்வங்களுக்கு தங்களின் நிலங்களில் விளைந்த கொக்கோ இலைகளை முதல் காணிக்கையாக படைப்பர். விலங்குகளை பலியிடுவர். சோளத்தால் தயாரிக்கப்பட்ட சிச்சா என்ற மதுவைப் படைத்து வணங்குவர்.

வட அமெரிக்காவில் மலை வழிபாடு

முதலாம் இரண்டாம் உலகப் போர் காலங்களில் ஐரோப்பாவில் இருந்து மக்கள் போய் குடியேறும் வரை வட அமெரிக்காவில் குடியிருந்த மண்ணின் மைந்தர் இன்று பழங்குடிகள் ஆகிவிட்டனர். அவர்கள் தங்களுடைய நாட்டார் சமயங்களைப் பின்பற்றி வந்தனர். கிறிஸ்தவ சமயம் அங்குப் பரவியதற்கு முன்பு இருந்த நாட்டார் சமயத்தை பாகனியம் (Paganism) என்று புதிய வந்தேறிகள் அழைத்தனர். அவ்வாறு பழைய சமயத்தைப் பின்பற்றுகின்ற பழங்குடி மக்களை பண்படாதவர்களாகவும், பாமரர்களாகவும், நாகரீகம் தெரியாதவர்களாகவும் புதிய அமெரிக்க குடிமக்களான வந்தேறி ஐரோப்பியர்கள் முத்திரை குத்தி விட்டனர். தற்போது கனடா மற்றும் அமெரிக்காவில் வாழும் பழங்குடி மக்களின் தொன்மக் கதைகளையும், மருத்துவம், உணவுப் பழக்க வழக்கம், பயிரிடுதல், வேட்டையாடுதல் முறைகளை சிலர் தொகுத்துப் பாதுகாக்கின்றனர்.

அமெரிக்கப் பழங்குடி மக்கள் நான்கு முக்கிய மலைகளை தங்களின் குடிகளின் பிறப்பிடமாகக் கருதி வணங்குகின்றனர். டெய்லர் மலை, சான் பிரான்சிஸ் கோவில் உள்ள மலைக் குன்றுகள், பிளாங்கா மலை, கொன்டு ஆகிய மலைகள் பழங்குடி மக்களால் தெய்வங்களாகப் போற்றப்பட்டன. கிறிஸ்தவ சமயம் பரவிய பின்பு மலை வழிபாடு ஆறு வழிபாடு விலங்கு வழிபாடு போன்றவை இங்கிருந்து மெல்ல மெல்ல மறையத் தொடங்கின.

அமேசான் மலைக் காடுகள் வழிபாடு

அமேசான் மலைகளின் பல குன்றுகளைத் தெய்வமாகக் கருதி மலைவாழ் மக்கள் வணங்கி வருகின்றனர். இம்மலைகளே இவர்களுக்கு உணவும் உறைவிடமாக வழங்குவதால் இவை அவர்களின் வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் தெய்வங்கள் ஆகும். 16ஆம் நூற்றாண்டு வரை மக்களிடையே மலை வழிபாடு சிறப்பாகவே இருந்து வந்தது.

ஆப்பிரிக்காவின் படைப்புக் கடவுள்

இருண்ட கண்டம் என்று ஆங்கிலேயரால் குறிப்பிடப்பட்ட ஆப்பிரிக்காவில் பல இடங்களில் மலை வழிபாடு இன்றும் காணப்படுகின்றது. கிரின் யாகா என்று ஆப்பிரிக்கர்களால் அழைக்கப்படும் கென்யா மலை முதன்மைப் படைப்புக் கடவுளான நிகாய் என்பதன் இருப்பிடமாக நம்பப்படுகின்றது. இக்கடவுள் மலையில் இருந்து இறங்கி வந்து நிலத்தையும், அத்தி மரங்களையும் படைத்தார் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாகும். இவர்களின் முக்கிய உணவாக அத்திப் பழங்கள் விளங்குவதால் அத்தி மரங்களைத் தங்களின் உணவுக்காக ஆண்டவன் முதன்முதலாகப் படைத்தார் என்றும், அதனால்தான் இவை மிகவும் சுவையுடையனவாக உடலுக்கு உரம் ஊட்டுபவையாக விளங்குகின்றன என்பதும் இவர்களின் ஆழமான நம்பிக்கை ஆகும்.

நாகர் இனத்தவரின் மலை வழிபாடு

நாகர் வழிபாடு என்பது லெமூரியா அல்லது குமரிக் கண்டம் (ஆப்பிரிக்கா, தென்னிந்தியா, கிழக்காசிய தீவுகள், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சேர்ந்த மொத்த நிலப் பகுதி) எனப்படும் மனிதன் தோன்றிய முதல் நிலப் பகுதியின் முதல் வழிபாட்டு முறை ஆகும். இந்த அகண்ட பரப்பின் மக்கள் அனைவரும் நாகத்தைத் தங்கள் முன்னோர் என்று நம்பினர். நாகத்தில் இருந்து தாம் தோன்றியதால் தங்களை நாகர் இனம் என்று அழைத்துக் கொண்டனர். இன்றும் இப்பகுதிகளில் நாகர் வழிபாடும் (முன்னோர் வழிபாடு) இயற்கை வழிபாடும் மாறாமல் மறையாமல் இருந்து வருகிறது.

எத்தியோப்பியாவில்…

எத்தியோப்பியாவில் மலை வழிபாட்டுடன் நாகர் வழிபாடும் இணைந்துள்ளது. டெப்ரோ த மோ எனப்படும் தட்டையான மலைப்பகுதியில் மலை வழிபாடும் நாகர் வழிபாடும் இணைந்து ஆறாம் நூற்றாண்டு வரை நடைபெற்றதாக கிறிஸ்துவ மிஷனரி ஜா மிகையேல் என்பவர் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்துவ சமயம் பரவியதற்கு பின்பு பண்டைய நாட்டார் வழிபாடுகள் மெல்ல மரல்ல பல நாடுகளில் மறைந்து போயின.

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து

நியூசிலாந்து நாட்டில் வடபகுதியில் உள்ள தீவில் மவுண்ட் தராணாக்கி என்ற மலை புனித மலையாகக் கருதப்பட்டது. அங்கு வழங்கப்படும் தொன்மக் கதைகளில் எரிமலை இறைவனின் கோபமாக கருதப்பட்டது. ஆஸ்திரேலியாவிலும் பழங்குடியினர் ஆங்கிலேயரும் கிறிஸ்தவ சமயமும் அங்கு புகுவதற்கு முன்பு மலை வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தனர். இம்மலையை ஆஸ்திரேலியா மலை என்று புதிய பெயரிட்டு ஆங்கிலேயர் அழைத்தனர்.

மலைக் கடவுளுக்குப் படையல்

கிறிஸ்தவ திருமறை குறிப்பிடும் கானான் தேசத்தில் மலை உச்சியில் கோவில்களும் பலி பீடங்களும் இருந்தன. அங்கு பாஹால் (Baal) எனப்படும் தெய்வத்திற்கு நாட்டின் வளமைக்காகவும் வெற்றிக்காகவும் படையல் இடப்பட்டு நறுமணப் புகை ஊட்டப்பட்டது. ஆண்களும் பெண்களும் கலந்து கொண்ட விருந்துகள் நடைபெற்றன. பாகால் ஹெர்மோன் எனப்படும் கடவுள் தங்கும் இடமாக மௌண்ட் ஹெர்மான் போன்ற சில மலைக் குன்றுகள் கருதப்பட்டன.

பாபிலோனியாவில் ஆறாம் நூற்றாண்டு வரை மலை வழிபாடு நடைமுறையில் இருந்துள்ளது. இரண்டாம் நேபுகாத்நேச்சார் என்ற மன்னன் ஆட்சிக் காலத்திலும் கூட மார்டுக் எனப்படும் மலைக் கடவுளுக்கு தினமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதாக அறிகின்றோம்.

மலையும் மழையும்

மலையைத் தெய்வமாக வழிபடுகின்ற மரபு உலக சமயங்கள் அனைத்திலும் காணப்படுகின்றது. மலையின் உச்சியில் இருந்து மழைமேகம் திரண்டு மழைப் பொழிவு நடைபெறுவதால் மலையை மழையோடு இணைத்துப் பார்க்கும் மரபும் பண்டைக்காலம் தொட்டே இருந்து வருகின்றது. சங்க கால இலக்கியமான முல்லைப்பாட்டில்,

‘‘நனந்தலை உலகம் வழங்கி நேமியோடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மால் போல”

– என்ற வரிகள் வரிகளில் காணப்படும் நேமி என்பது பெருமாள் கையில் ஏந்தி இருக்கும் சக்கரத்தையும் வலம்புரி என்பது வலம்புரிச் சங்கையும் மா தாங்கு தடக்கை என்பது லட்சுமியை தாங்கி இருக்கும் பெரிய வலது கையையும் நீர் செல்ல நிமிர்ந்த மால் என்பது தண்ணீர் மலைபோல் மலையில் இருந்து பொழிய நிமிர்ந்து நின்ற நெடுமால் என்று பெருமாளை குறிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து

‘‘பாடிமழ் பனிக்கடல் பருகிப்
வலனேர்பு கோடு கொண்டு எழுந்த
கொடுஞ் செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த சிறு புன்மாலை”

– என வரும் வரிகள் அலைகள் பாடுகின்ற குளிர்ந்த கடலின் நீரை பருகி வலப் பக்கமாக சுழித்து எழுந்து விரைந்து மேலே சென்ற மேகம் பெரு மழையாக பொழிந்த சிறிய மாலைப்பொழுது என்று முல்லை நிலத்தின் சிறு பொழுதான மாலைப்பொழுது வர்ணிக்கப்படுகின்றது. இப் பாடல் வரிகள் கடல் நீர் ஆவியாகி மேலே சென்று எழிலி மேகமாகி அங்கிருந்து பெருமழையாக கொட்டுகின்றது என்ற கருத்தை உணர்த்துகின்றன.

இப்பாடல் வரிகளில் புலவர் நப்பூதனார் மலையைத் நிமிர்ந்து நிற்கும் திருமாலாக உவமிக்கின்றார். மழை பெருமாளின் உள்ளங்கையில் இருந்து பொழியும் அருட்பொழிவாகும். இவ்வருணனை வெறும் அழகியலுக்காக (aesthetics) அமைந்தது அல்ல. பல நூற்றாண்டுகளாக மக்களிடம் இருந்து வரும் மழைச் சடங்கு சார்ந்த நம்பிக்கையை எதிர்காலத் தலைமுறையினருக்குப் பதிவு செய்ததாகும். அழகர் மலையிலிருந்து புறப்பட்டு வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதை மழைச் சடங்கின் தொடர்ச்சி என்று பேரா. முனைவர் சி. பொன்னுத்தாய் ஆய்வுரை வழங்கியுள்ளார். இங்கு மலையில் இருந்து புறப்படும் பெருமாள் கார்மேக வண்ணனாக கள்ளழகராக மழையின் உருவாக மலையில் இருந்து இறங்கி அப்பன் திருப்பதி, கள்ளந்திரி, தல்லாகுளம், கோரிப்பாளையம் என சமதளங்களில் பயணித்து நிறைவாக வைகை ஆற்றில் இறங்குகின்றார்.

மழைச் சடங்கு ஒரு போன்மைச் சடங்கு

சர் ஜேம்ஸ் பிரேசர் உலகெங்கும் பயணித்து மண்ணின் மக்களின் சமயச் சடங்குகளையும் மரபுகளையும் நம்பிக்கைகளையும் தொகுத்து 12 தொகுதிகளாக The Golden Bough என்ற பெயரில் வெளியிட்டார். அவற்றில் அவர் உலகெங்கும் பல நாடுகளில் மழை வரம் வேண்டும் மக்கள் மலையில் இருந்து தண்ணீர் பொழிவதாக போலியாகச் செய்து காட்டுவார்கள். இதை போன்மைச் சடங்கு (Imitative Ritual) என்கின்றார்.

மழைச் சடங்குகள் நம் நாட்டிலும் நடைமுறையில் உண்டு. வறட்சி காலத்தில் மழை வரம் வேண்டியும் மக்கள் மண் சட்டியில் தண்ணீரை நிரப்பி அதில் மீன் தவளை நண்டு போன்றவற்றை உயிருடன் பிடித்துப் போட்டுவிட்டு வீடு வீடாகப்போய் மழைக் கஞ்சிக்கு அரிசி சேகரித்து வருவார்கள். மழை வந்த பிறகு நதிகளில் தண்ணீர் நீர் நிரம்பி அதில் நீர் இனங்கள் உயிர் வாழ்வது போல இவர்கள் மழை இல்லாத காலத்திலேயே செய்து காட்டுவதைத்தான் போன்மைச் சடங்கு என்கின்றார், ஃபிரேசர். இவ்வாறான ஒரு போன்மைச் சடங்காக அழகர் மலையில் இருக்கும் கார்மேக வண்ணனான சுந்தரராஜ பெருமாள் மலையிலிருந்து அருவியாக இறங்கி வைகை ஆற்றில் வந்து கலக்கின்றார். முல்லைப்பாட்டு வருணனை பெருமாளின் பெயரால் மலைக்கும் மழைக்குமான இணைப்பைப் பதிவு செய்துள்ளது.

ஆண்டாள் பிற்காலத்தில்
தன் திருப்பாவையில்
‘‘ஆழி மழைக் கண்ணா ஒன்றும் நீ கர்வேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு, அது ஏறி’’

என்று பெருமாளின் அருட்கொடையை வருணித்ததும் இவண் ஒப்பிடத்தக்கதாகும். கருமை நிற மால் மலைக்கும் அவரது அருட் பொழிவு மழைக்கும் இணையானது என்ற கருத்தை இப்பாடல் வரிகள் உறுதி செய்கின்றன.

நிறைவு

கால மாற்றத்தால் மலைக் கடவுளாக போற்றப்பட்ட நிலை மாறி, கடவுள் மலையோடு ஒப்பிடப்படும் நிலை தோன்றியது. இதுவே சமய மரபு மாற்றம் ஆகும். மாற்றம் ஒன்று தானே மாறாதது. இதுவும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் தோன்றிய ஒரு மலைச் சடங்காகும் என்று வைதீகச் சடங்காக வைணவ பக்தர்களால் கொண்டாடப்படுகின்றது. இவ்வாறு நாம் இன்றைய சமய பழக்க வழக்கங்களையும் சடங்குகளையும் ஆதிகாலம் தொட்டு அதன் தொன்மையை மீட்டுருவாக்கம் செய்து காணலாம்.

முனைவர் செ. ராஜேஸ்வரி

Tags : Andes Mountain ,Andes ,South America ,Peru ,Bolivia ,Appus ,
× RELATED நவகிரக தோஷங்களை போக்கும் சூரியனார் கோயில்