பொங்கல் ரெசிபிகள்

போகி கேரட் போளி

தேவையானவை:

மேல் மாவிற்கு:

மைதா மாவு – ½ கப்,
லெமன் ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை,
வெண்ணெய் – 1 டீஸ்பூன், வெள்ளை
ரவை – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 1 டீஸ்பூன்.

பூரணம் செய்ய:

கேரட் துருவல்- 1 கப்,
தேங்காய் துருவல்-4 டீஸ்பூன்,
ஏலப்பொடி- ஒரு சிட்டிகை,
பொடித்த சர்க்கரை – ¾ கப்,
பொட்டுக்கடலை மாவு – 2 டீஸ்பூன்,
நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

மேல் மாவிற்கு கொடுத்தவற்றை தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவை விட சற்று தளர்த்தியாக பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும். ரவை ஊறி மாவு சரியான பதத்தில் வந்துவிடும். அடி கனமான வாணலியில் நெய் ஊற்றி கேரட் துருவல், தேங்காய் துருவல் இரண்டையும் வதக்கி, பாதியளவு வெந்ததும் ஆறியதும் மிக்ஸியில் நீர் விடாமல் ஒரு சுற்று சுற்றி, அதே வாணலியில் போட்டு பொடித்த சர்க்கரை சேர்த்துக் கிளறி பொட்டுக்கடலை மாவு, ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும். பூரணம் தயார்.ஒரு வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி, மேல் மாவை அப்பளம் மாதிரி தட்டி, பூரணத்தை அளவாக வைத்து மூடி போளியாக தட்டவும். இதை தவாவில் போட்டு ஓரங்களில் எண்ணெய், நெய் கலவையை ஊற்றி, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும். சுவையான கேரட் போளி தயார்.

பைனாப்பிள் பொங்கல்

தேவையானவை:

பச்சரிசி – 1 கப்,
சர்க்கரை – 1 கப்,
அரிந்த பைனாப்பிள் துண்டுகள் – ½ கப்,
நெய் – 6 டீஸ்பூன்,
லெமன் ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை,
ஏலப்பொடி – ஒரு சிட்டிகை,
முந்திரி – 6, பால் – 1 கப்.

செய்முறை:

அடுப்பில் வெறும் வாணலியில் அரிசியை வறுக்கவும். பைனாப்பிளை மிக்ஸியில் நீர் விட்டு நைசாக அரைத்து வடிகட்டவும். வறுத்த அரிசியை கழுவி பால், பைனாப்பிள், தண்ணீர் 1 கப் சேர்த்து குழைய வேக விடவும். சர்க்கரையில் ஃபுட் கலர், ஏலப்பொடி, சிறிது நீர் விட்டு கம்பிப் பாகு வைத்து வெந்த பொங்கலைச் சேர்த்து இடையிடையே நெய் விட்டுக் கிளறி இறக்கவும். மீதியுள்ள நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்து நன்றாக கிளறவும். வித்தியாசமான சுவையான பைனாப்பிள் பொங்கல் தயார்.

வரகரிசி பொங்கல்

தேவையானவை:

வரகரிசி – 1 கப்,
பயத்தம் பருப்பு – கால் கப்,
மிளகு – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
முந்திரி – 8, நெய் – ¼ கப்,
பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

செய்முறை:

வரகரிசியையும், பயத்தம் பருப்பையும் சுத்தம் செய்து, தண்ணீர் விட்டு, பத்து நிமிடம் ஊற வைக்கவும். பின் இதில் பெருங்காயத்தூள் கலந்து குழைய வேகவிட்டு வெந்தவுடன், தேவையான உப்பு கலந்து மிதமான தீயில் கிளறவும். கடாயில் நெய்விட்டு முந்திரி, மிளகு, சீரகத்தை வெந்த பொங்கல் கலவையில் கலந்து இறக்கவும். சூடான, சத்தான வரகரிசி பொங்கல் தயார்.

ஜவ்வரிசி பொங்கல்

தேவையானவை:

ஜவ்வரிசி – ½ கப்,
பச்சரிசி – ½ கப்,
பயத்தம் பருப்பு – ¼ கப்,
கடலைப்பருப்பு – ¼ கப்,
மிளகு – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
முந்திரி – 8,
நெய் – ¼ கப்,
உப்பு – தேவைக்கு.

செய்முறை:

ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பச்சரிசி, பருப்புகளை சுத்தம் செய்து தேவையான தண்ணீர் விட்டு ஜவ்வரிசியையும் கலந்து குக்கரில் வேக வைத்து எடுத்து உப்பு சேர்த்து கலக்கவும். வாணலியில் நெய் விட்டு சூடானதும் முந்திரி, மிளகு, சீரகம் வறுத்து பொங்கலில் கலந்து கிளறி இறக்கவும். சுவையான ஜவ்வரிசி பொங்கல் தயார்.

சிவப்பு அவல் பொங்கல்

தேவையானவை:

சிவப்பு அவல் – 1 டம்ளர்,
தேங்காய் துருவல் – ½ டம்ளர்,
பனங்கற்கண்டு – ½ டம்ளர்,
முந்திரி, திராட்சை, ஏலப்பொடி, நெய் – 4 டீஸ்பூன்,
வெள்ளரி விதை – 1 டீஸ்பூன்,
உப்பு – சிட்டிகை,
பால் – 1 டம்ளர்.

செய்முறை:

வாணலியில் அவலை வறுத்து ஆறிய பின் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து, பாலில் வேகவைத்து தேங்காய் துருவல், உப்பு சேர்த்து பனங்கற்கண்டு போட்டு கலந்து கிளறி ஏலப்பொடி, வறுத்த முந்திரி, வெள்ளரி விதை சேர்த்து நன்றாக வெந்தபின் இறக்கவும். சத்தான சிவப்பு அவல் பொங்கல் தயார்.

பனீர் பொங்கல்

தேவையானவை:

பச்சரிசி – 1½ கப்,
பனீர் துருவியது – ½ கப்,
வெல்லம் – 1 கப்,
பாதாம், முந்திரி – ¼ கப்,
நெய் – 4 தேக்கரண்டி,
ஏலப்பொடி – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவைக்கு.

செய்முறை:

பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து குழைய வேக வைக்கவும். வெந்த பின் சிட்டிகை உப்பு போட்டு, வெல்லம் சேர்த்துக் கிளறி சுண்டியதும் நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், ஏலப்பொடி கலந்து துருவிய பனீர் போட்டு சிறு தீயில் வைத்துக் கிளறி இறக்கவும். ருசியான பனீர் பொங்கல் தயார்.