×

‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்’ ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டது: எடப்பாடி விளக்கம்

சென்னை: ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்’ ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ‘ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின்’ பெயரை மாற்றிவிட்டு, தற்போது தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்று அறிவித்துள்ளது.

இச்செயல் `புதிய மொந்தையில் பழைய கள்’ என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. ஓய்வு பெறும்போது கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம், விலைவாசி புள்ளி உயர்வின் அடிப்படையில் அகவிலைப்படியும் கிடைக்கும்; ஊதியக்குழு பரிந்துரையின்படி ஓய்வூதிய அடிப்படை தொகையும் மாற்றியமைக்கப்படும்.

ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களிடம் இருந்து மாதம்தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுவது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் அப்பட்டமான நகல் ஆகும்.

எனவே, எதிர்பார்த்தபடி பெரிய மாற்றம் ஏதுமில்லை என்பதை பல அரசு ஊழியர்கள் உணர்ந்திருந்தாலும், இனிப்பு என்ற பெயரில் பொய்யை மூடி மறைத்த சங்க நிர்வாகிகள், புதிய திட்டத்தை ஏற்றுக்கொண்டு புன்னகைப்பது வேடிக்கையாக உள்ளது. உண்மையை அரசு ஊழியர்கள் ஒருநாள் உணர்வார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டதையும், அதற்கு சங்க நிர்வாகிகள் துணை போயுள்ளனர் என்பதையும் புரிந்துகொள்வார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : EU government ,Edappadi ,Chennai ,Secretary-General ,Edappadi Palanisami ,Tamil Nadu ,Union Government ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...