×

புதியதாக கார், பைக் வாங்குபவர்களை குறிவைத்து வெளிநாடுகளுக்கு இலவசமாக அழைத்து செல்வதாக மோசடி: 4 பேர் சிக்கினர்

 

போரூர்: சேலத்தில் புதியதாக கார், பைக் வாங்குபவர்களை குறி வைத்து, வெளிநாடுகளுக்கு இலவசமாக அழைத்து செல்வதாக கூறி மோசடி செய்யும் கும்பலை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரித்து வருகின்றனர். சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல பேக்கேஜ் முறையில் பணத்தை கட்டினால் அதனை 5 ஆண்டுகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னையை சேர்ந்த கோஷ்டியினர், சிலருக்கு அழைப்பு விடுத்தனர்.

அவர்கள் புதியதாக கார், பைக்களை வாங்கிய நபர்களை தொடர்பு கொண்டு, உங்களை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், ஓட்டலுக்கு வரும்படியும் அழைப்பு விடுப்பர். அதன்படி சேலம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் அழைப்பு விடுக்கப்பட்ட 35க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் சூரமங்கலம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திரண்டனர். அங்கு சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சண்முகம் என்பவர் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

அவர்கள், அனைவரிடமும் முதற்கட்டமாக 25 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் எனவும், வெளிநாடுகளுக்கு செல்ல ரூ.1.50 லட்சம் வரை என பேக்கேஜ் முறையில் கட்டும்படியும் தெரிவித்தனர். அவ்வாறு செலுத்தும் கட்டணம் விமான செலவிற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும், மற்றபடி சுற்றுலா சென்ற பிறகு அங்கு தங்குமிடம், உணவு என அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்படும் எனவும் ஆசை வார்த்தை கூறினர். இதனை நம்பி பணத்தையும் சிலர் கட்டினர்.

அந்தசமயத்தில் அங்கு வந்திருந்த தனியார் பள்ளியில் பணியாற்றும் மேலாளர் ஒருவர், கடந்த 15 நாட்களுக்கு முன்பு இதேபோல் என்னை ஒரு சிலர் அழைத்து சுற்றுலா அழைத்து செல்வதாக கூறியதன்பேரில் பேக்கேஜ் முறையில் ரூ.1.50 லட்சம் கட்டியுள்ளேன். அதன் பின்னர் அவர்கள் எனது செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. அவர்கள் அழைத்தது போன்றே நீங்களும் அழைத்ததால் இங்கு வந்துள்ளதாகவும், அவர் கட்டிய பணம் குறித்தும் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த கோஷ்டியை சேர்ந்த சிலர் அங்கிருந்து நைசாக நழுவி சென்றனர்.

இதுபற்றி சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் சென்றது. அதன்பேரில் அந்த நட்சத்திர ஓட்டலுக்கு போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது, சண்முகம் தலைமையில் 15 பேர் கொண்ட குழு இதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பது தெரிந்தது. மேலும் இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, புதியதாக கார், பைக்கள் வாங்கும் நபர்களை தொடர்பு கொண்டு பேசி அழைப்பு விடுப்பர்.

அதனை நம்பி வரும் நபர்களிடம் சுற்றுலா அழைத்துச்செல்வதாக பேக்கேஜ் முறையில் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிடுவர். அவ்வாறு நேற்றுமுன்தினம் மட்டும் பல லட்சம் ரூபாயை அங்கு வந்தவர்களிடம் பெற்றிருப்பதும், தனியார் பள்ளி மேலாளரை ஏமாற்றிய கோஷ்டியினரும் இவர்களும் ஒரே குழுவை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்த சண்முகம், பார்த்திபன், பவராஜ், மணிகண்டன் ஆகியோரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் இதுபோன்று எவ்வளவு பணம் ஏமாற்றி உள்ளார்கள் எனவும், அவர்களுடன் இருக்கும் மற்ற நபர்கள் குறித்தும், நேற்று முன்தினம் வந்தவர்களில் யாரிடம் எல்லாம் பணத்தை பெற்றுள்ளார்கள் எனவும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Borur ,Salem ,Salem Suramangalam ,India ,
× RELATED சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு...