*விவசாயிகள் தீவிரம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி பகுதியில், பொங்கல் பண்டிகையொட்டி ரேக்ளா பந்தயத்துக்கு காயங்கயம் இன காளைகளுக்கு பயிற்சி அளித்து, தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் ரேக்ளா பந்தயங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. சுமார் 7 ஆண்டுக்கு முன்பு, ரேக்ளா பந்தயத்திற்கான தடை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு இருந்ததால், சுற்றுவட்டார பகுதியில் ரேக்ளா பந்தயம் குறைந்தது.
இருப்பினும் அவ்வப்போது, காங்கயம் இன காளைகளை பாதுகாப்பது மற்றும் விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தடையை மீறி சில இடங்களில் மட்டுமே ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டு வந்தன.
பின்பு ரேக்ளா பந்தயம் நடத்த அரசு மீண்டும் அனுமதி அளித்ததால், கடந்த 4 ஆண்டுக்கு முன்பிருந்து, பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை, கிணத்துக்கடவு, கோட்டூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் விவசாயிகள் ரேக்ளா பந்தயத்தை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதை தொடர்ந்தனர்.
இந்நிலையில் வரும் 15ம் தேதி பொங்கல் பண்டிகை அதன் பின் 18ம் தேதி வரை தொடர்ந்து விடுமுறையையொட்டி, பல்வேறு கிராம பகுதிகளில் ரேக்ளா பந்தயம் நடத்த விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். ரேக்ளா பந்தயம் நடத்தவதற்காக, காங்கயம் இன காளைகளை தயார்படுத்தி, அதற்கு பயிற்சி அளித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, சாலையில் மாடுகளை பூட்டி குறிப்பிட்ட தூரம் விரைந்து சென்று பயிற்சி எடுக்கின்றனர்.
இதுகுறித்து காளைகளை தயார்படுத்தும் விவசாயிகள் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதி, உடுமலை, ஈரோடு, தாராபுரம், திருப்பூர், பழனி, ஒட்டன் சத்திரம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ரேக்ளா பந்தயங்கள் விமர்சையாக நடத்தப்படுகின்றன. தற்போது ரேக்ளா பந்தயம் நடத்துவதற்கான தடை என்பது இல்லாததால், கடந்த சில ஆண்டுகளாக கிராமங்களில் ரேக்ளா பந்தயம் எந்தவித தடையின்றி நடக்கிறது.
இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையொட்டி, ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காங்கயம் இன காளைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதை தொடர உள்ளோம். இதற்காக, காங்கேயம் இன காளைகளை தயார்படுத்தி, ரேக்ளா பந்தயத்தில் வெற்றிபெற பயிற்சி தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது’’ என தெரிவித்தர்.
