×

60 ஆண்டுகளுக்கு பிறகு மானூர் பெரியகுளம் 2வது முறையாக நிரம்பி மறுகால் பாய்கிறது விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை, ஜன.9: மானூர் பெரியகுளம் 60 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 2வது முறையாக முழுவதுமாக நிரம்பி மறுகால் பாய்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 2வது பெரியகுளமாகத் திகழும் மானூர் பெரியகுளத்தின் மூலம் மானூர், மாவடி, மதவக்குறிச்சி, எட்டான்குளம் ஆகிய 4 ஊராட்சிகளில் உள்ள சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இவைதவிர சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் நீராதாரமாகவும் இக்குளம் விளங்கிவருகிறது. பண்டைய மன்னர்கள் காலத்தில் தாமிரபரணி ஆற்றில் முக்கூடல் அருகே திருப்புடைமருதூரில் மண்ணால் அணைக்கட்டப்பட்டு மதிகெட்டான் கால்வாய் மூலம் மானூர் பெரிய குளத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது. மதிக்கெட்டான் கால்வாய் காலப்போக்கில் தூர்ந்து மாயமானது. இதையடுத்து ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தாமிரபரணி கிளை நதியான சித்ரா நதி என அழைக்கப்படும் சிற்றாற்றிலிருந்து மானூர் பெரிய குளத்துக்கு தண்ணீர் கொண்டுவரும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டது.

வீரகேரளம்புதூர் தாயார் தோப்பு பகுதியில் சிற்றாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் இருந்து நீர்வரத்து கால்வாய் மூலம் மானூர் குளத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. இதில் வழித்தடக்குளங்களான 19 குளங்கள் நிரம்பி இறுதியாக மானூர் பெரியகுளத்துக்கு தண்ணீர் வந்து ேசரும். கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தால் மானூர் பெரிய குளம் நிரம்பாமல் காணப்பட்டது. இதனால் விவசாயிகள் போதிய மழை இல்லாததால் விவசாய பணிகளை செய்ய முடிாத நிலை காணப்பட்டது. இதைதொடர்ந்து இந்த ஆண்டு பருவமழைக்கு முன்பாக மானூர் நீர்வரத்து கால்வாயை தடையின்றி தண்ணீர் வரும் வகையில் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை தூர்வாரி சீரமைத்தது. இதைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த போது சிற்றாறு நீர்வரத்து கால்வாய் மூலம் தங்குதடையின்றி மானூர் பெரிய குளத்துக்கு தண்ணீர் வந்தடைந்தது.

இதைதொடர்ந்து கடந்த மாதம் முழு கொள்ளளவை எட்டி மறுகால்பாய்ந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையால் சிற்றாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மானூர் பெரியகுளம் 2வது முறையாக முழுவதுமாக நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் விவசாய பணிகளை மேற்கொண்டுள்ள விவசாயிகள் 2வது முறையாக மானூர் பெரியகுளம் நிரம்பி மறுகால் பாய்வதால் போதியளவு நீர் இருப்பு குளத்தில் உள்ளதை கண்டு மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

Tags : Manur Periyakulam ,Nellai ,Periyakulam ,Nellai district ,Manur ,Mavadi ,Madavakurichi ,Ettankulam… ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை