×

முதலமைச்சர் ஆவோம் என எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்

பவானி, ஜன. 26: பவானியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். பவானி நகர், ஒன்றிய பகுதிகளில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். பவானி ஒன்றிய குழு தலைவர் பூங்கோதை வரதராஜ், அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் பிரகாஷ், செயலாளர் பிரபாகரன், மருத்துவர் கே.யுவராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு வரவேற்றார். தகவல் தொழில்நுட்பப் பிரிவு அலுவலகங்களைத் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது: அ.தி.மு.க நிர்வாகிகள் மக்கள் பணியில் ஈடுபடுவதில் இருந்து எப்போதும் பின்வாங்கக்கூடாது. தற்போது இளைஞர்களுக்கு அ.தி.மு.க.வில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பல்வேறு பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க.வில் மட்டுமே சாதாரணத் தொண்டன், மிகப் பெரிய பதவிக்கும், பொறுப்புக்கும் வரமுடியும். பிற கட்சிகளில் இவ்வாறான வாய்ப்புகள் கிடைக்காது. தற்போது தலைவராக உள்ள அ.தி.மு.க.வினர் 60 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். ஓரிரு தேர்தல்களுக்குப் பின்னர் எங்களுக்கு வேலையில்லை. நேரம், காலம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராவோம் என எடப்பாடி பழனிசாமி கனவுகூடக் கண்டிருக்க மாட்டார். ஆனால், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு பின்னால் பவானிக்குகூட வந்த அந்த வாய்ப்பு வரலாம்.
நாங்கள் கடந்துபோன பின் நீங்கள் தான் இருப்பீர்கள்.

உங்களுக்கு எதிர்காலத்தில் அமைச்சர், எம்.எல்.ஏ. உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. மக்களுக்குத் தேவையான பல்வேறு சேவைப் பணிகளில் இளைஞர்கள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். இதன் மூலம், மக்களிடம் அங்கீகாரம் கிடைப்பதோடு, அரசியலில் பல்வேறு பதவிகளுக்கும், பொறுப்புகளுக்கும் வரலாம். இவ்வாறு அமைச்சர் கருப்பணன் பேசினார். இந்நிகழ்ச்சியில் மண்டலப் பொருளாளர் கே.எஸ்.மோகன்குமார், நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் எம்.ஜி.நாத் (எ) மாதையன், பவானி நகராட்சி முன்னாள் தலைவர் துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Edappadi ,Chief Minister ,
× RELATED வீடு இல்லாதவர்களுக்கு 2 சென்ட் நிலம்...