திருவண்ணாமலை, ஜன.8: சாத்தனூர் அணையில் இருந்து தை முதல் வாரத்தில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகாவில் தென்பெண்ணையின் குறுக்கே அமைந்துள்ள சாத்தனூர் அணையின் ெமாத்த கொள்ளளவு 119 அடியாகும். கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் அணை முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது. அதன்படி, அணையின் நீர்மட்டம் 118.75 அடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், மொத்த கொள்ளளவான 7321 மி.கனஅடியில் தற்போது 7264 மிக அடி இருப்பு உள்ளது. சாத்தனூர் அணையின் நீர் பாசனத்தை நம்பி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் 50 ஏக்கர் சாகுபடி நடைபெறுகிறது.
எனவே, அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுற கால்வாய் வழியாக மூன்று மாவட்ட விவசாயத்துக்கும் ஆண்டுதோறும் தண்ணீர் திறப்பது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து, விவசாயிகளிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று மாலை நடந்தது. அதில், மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட செயற் பொறியாளர் அறிவழகன், சாத்தனூர் அணை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் மற்றும் பாசன சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, அணையில் தற்போதுள்ள நீர் இருப்பின் அடிப்படையில், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், அணை பராமரிப்பு, பூங்கா பராமரிப்பு மற்றும் மீன்வளர்ப்பு ஆகியவற்றை கணக்கிட்டும், அணையின் உத்தேச நீர் இழப்பு மற்றும் திருவண்ணாமலை, தானிப்பாடி, சாத்தனூர் கூட்டு குடிநீர் திட்டம், புதுப்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் போன்றவற்றுக்கு தேவையான நீர் இருப்பு வைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படடது. அதன்படி, அத்தியாவசிய தேவைகளுக்கு போக, மீதமுள்ள தண்ணீரை விவசாய பாசனத்துக்கு கடந்த ஆண்டு போல 110 நாட்கள் வழங்க வாய்ப்பு இருப்பதகாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். அப்போது, பின் சம்பா பருவ நெல் சாகுபடிக்கு பயன்படும் வகையில், தை முதல் வாரத்தில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைத்தனர். எனவே, விவசாயிகள் தெரிவித்த கருத்து அரசின் பரிசீலனைக்கு அனுப்பி தண்ணீர் திறப்பது குறித்த தேதி முடிவு செய்யப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
