சென்னை: சில அமைப்புகளின் தூண்டுதலால் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், சிலரது சுயநல நோக்கத்திற்காக அவர்களை தவறாக வழி நடத்துவதை கைவிட வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி தொழிற்சங்கங்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். சென்னை மாநகராட்சி பொது ஊழியர்கள் முன்னேற்ற சங்கம், சென்னை மாநகராட்சி ஊர்தி ஓட்டுநர் சங்கம், ஐஎன்டியூசி சங்கம், சென்னை மாநகராட்சி அனைத்து துறை ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட 10 சங்கங்கள் இணைந்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவது வருத்தத்தை அளிக்கின்றது.
அதே சமயம், இவ்விஷயத்தில் உள்ள உண்மை நிலைமை நம்மக்களுக்குத் தெளிவாக தெரிய வேண்டும் என்பதையும், தவறான வாக்குறுதிகளை நம்பாமல், உண்மையான தொழிலாளர் நலத்தை பேணுபவர்களை அடையாளம் கண்டு, அவர்களுடன் தூய்மைப் பணியாளர்கள் அணி திரள வேண்டும் என்பதையும் இச்சங்கங்கள் பணிவுடன் கேட்டுக் கொள்கிறது. சுய உதவி குழுக்கள் மூலம் சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மண்டலம் 5 மற்றும் 6ல் தூய்மைப் பணிகள் தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அந்த தனியார் நிறுவனங்களின் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், சில அமைப்புகள் உள்நோக்கத்துடன், தனியார் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டாம் என்றும், நேரடியாக மாநகராட்சியின் கீழ் சுய உதவி குழு ஒப்பந்த பணியாளர்களாகவே பணியாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைப்பது புரியாததாக உள்ளது. இதன் விளைவாக, அப்பாவி தூய்மைப் பணியாளர்கள் பல மாதங்களாக ஊதியம் இன்றி தவிப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில், ஏற்கனவே 11 மண்டலங்களில் 2020 முதல் தூய்மைப் பணிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அப்போது வரை மாநகராட்சியில் சுய உதவி குழுவின் மூலமாக பணியில் இருந்த 5000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பின்னர் உர்பேசர் நிறுவனத்தின் சேர்ந்து தற்போது வரை பணிபுரிந்து வருகிறார்கள்.
அதே நடைமுறையை தொடர்ந்து, மண்டலம்-5 மற்றும் 6 ஆகியவற்றின் தூய்மைப் பணிகளும் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், முன்பு என்யூஎல்எம் திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் பணியாற்றிய 435 தூய்மைப் பணியாளர்கள் தற்போது தனியார் நிறுவனங்களில் இணைந்து சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். மேலும், தனியார் நிறுவனங்கள் மூலம் குறைந்தபட்ச தினக்கூலி அமல்படுத்தப்பட்டு, பிற சலுகைகளும் வழங்கப்பட்டு வருவதை சென்னை மாநகராட்சி உறுதி செய்துள்ளதற்காக இச்சங்கங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. தற்போது, உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும், சில அமைப்புகளின் தூண்டுதலின் பேரில், தேவையற்ற முறையில் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படுவது, பொதுமக்கள் முன்னிலையில் தூய்மைப் பணியாளர்களின் மீது நன்மதிப்பை இழக்கும் நிலையை உருவாக்குகிறது.
மேலும், திசைகளற்ற போராட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் இத்தொழிற்சங்கங்கள் கேட்டுக் கொள்கிறது.
கடந்த 4 மாதங்களாக பணியில் ஈடுபடாத நிலையில், தூய்மைப் பணியாளர்கள் மிகுந்த பொருளாதார சிரமத்திற்கு உள்ளாகி வருவதை கருத்தில் கொண்டு, மண்டலம்-5 மற்றும் 6-ல் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்வதை சென்னை மாநகராட்சி உறுதி அளித்துள்ளது. எனவே, அனைத்து தூய்மைப் பணியாளர்களும் உடனடியாக பணியில் சேர்ந்திடவும், பின்னர் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு ஏற்ப செயல்படவும் இச்சங்கங்கள் வலியுறுத்துகிறது.
சுயநல நோக்கத்திற்காக சிலர், அப்பாவி தூய்மைப் பணியாளர்களை தவறாக வழிநடத்தி, வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையிலும் தேவையற்ற போராட்டங்களைத் தூண்டுவதை உடனடியாக கைவிடுமாறு அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் இச்சங்கங்கள் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
