×

ஊக்க மருந்து பயன்படுத்திய புகாரில் உத்தராகண்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ராஜன் குமார் சஸ்பெண்ட்!

டெஹ்ராடூன் : ஊக்க மருந்து பயன்படுத்திய புகாரில் உத்தராகண்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ராஜன் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கிரிக்கெட் வீரர் ராஜன் குமார் கடைசியாக 2025ல் சையது முஸ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ராஜன் குமார் (29), ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததையடுத்து, அவருக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவரது மாதிரியில் Drostanolone, Metenolone ஆகிய அனபோலிக் ஸ்டெராய்டுகளும், Clomifene என்ற தடைசெய்யப்பட்ட மருந்தும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கமாக பெண்களுக்கு மலட்டுத்தன்மை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் Clomifene, ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவும் என்பதால் விளையாட்டுப் போட்டிகளில் இதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 8, 2025 அன்று டெல்லிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் கடைசியாக விளையாடிய ராஜன் குமாரின் கிரிக்கெட் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இதே போல் தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை தனலட்சுமி சேகர், இரண்டாவது முறையாக ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதற்காக அவருக்கு 8 ஆண்டுகள் கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ல் முதல்முறை சிக்கி 3 ஆண்டுகள் தடை அனுபவித்துவிட்டு, 2025-ல் மீண்டும் களமிறங்கிய தனலட்சுமி, செப்டம்பர் 2025-ல் மீண்டும் Drostanolone பயன்படுத்தியது உறுதியானது.

இந்திய கிரிக்கெட்டில் இத்தகைய சம்பவங்கள் அரிதானவை என்றாலும், இதற்கு முன் 2019-ல் பிருத்வி ஷா மற்றும் 2020-ல் மத்தியப் பிரதேச ஆல்ரவுண்டர் அன்ஷுலா ராவ் ஆகியோர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கித் தடையைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுத் துறையில் நேர்மையையும் ஒழுக்கத்தையும் உறுதி செய்ய இந்திய அரசு எடுத்து வரும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள், இளம் வீரர்களிடையே எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : UTTARAKHAND ,CRICKETER RAJAN KUMAR ,TEHRADUN ,CRICKETER ,RAJAN KUMAR ,SYEDU MUSTAG ALI CUP CRICKET MATCH ,
× RELATED ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் வீழ்ந்தார் வீனஸ்