டாக்கா: ஐபிஎல் டி20 போட்டிகளை வங்கதேசத்தில் ஔிபரப்ப, அந்நாட்டு அரசு நேற்று தடை விதித்துள்ளது. வங்கதேசத்தில் சமீப நாட்களாக நடந்து வரும் வன்முறை சம்பவங்களில் இந்து இளைஞர்கள் சிலர் கொல்லப்பட்டனர். அதனால், ஐபிஎல்லில் ஆடிவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் இடம்பெற்றதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து, முஸ்தபிசுரை நீக்கும்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உத்தரவிட்டது. அதன்படி, கேகேஆர் அணியில் இருந்து முஸ்தபிசுர் நீக்கப்பட்டார். இந்த விவகாரம் வங்கதேச அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. முஸ்தபிசுரை நீக்கியதால், இந்தியாவில் ஐபிஎல்லில் ஆடும் வங்கதேச வீரர்களுக்கு பாதுகாப்பு இருக்காது எனக் கூறி, வங்கதேசம் ஆடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்றும்படி ஐசிசியிடம் வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளை வங்கதேசத்தில் ஒளிபரப்ப, அந்நாட்டு அரசு நேற்று தடை விதித்து, பிரச்னையை மேலும் பூதாகரமாக்கி உள்ளது. இது தொடர்பாக, வங்கதேச தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘ஐபிஎல் போட்டிகளில் இருந்து முஸ்தபிசுர் ரஹ்மானை எந்தவொரு காரணமும் இன்றி பிசிசிஐ நீக்கியது, வங்கதேச மக்களை காயப்படுத்தி உள்ளது; இது, சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த சூழ்நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை, ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்புவதை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிடப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.
