போடி, ஜன. 6: போடி அருகே சிலமலைமணியம்பட்டி சாலை பகுதியில் குடியிருப்பவர்கள் முருகன்(62), மாணிக்கவாசகம்(49). வீட்டின் அருகே குப்பை கொட்டுவது தொடர்பாக இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரு குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, கைகளாலும், கம்புகளாலும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில், முருகனும், மாணிக்கவாசகமும் படுகாயமடைந்தனர். போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின்பேரில் 4 பேர் மீது போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
