×

புத்தாண்டில் புதிய அழைப்பும், வாய்ப்பும்!

நன்றி குங்குமம் தோழி

வாழ்க்கை சிலருக்கு பல சவால்களை தருகிறது. அந்த சவால்களையே சாதனைகளாக மாற்றி வரலாறு படைக்கிறார்கள் சிலர். அதிலும் குறிப்பாக தாங்கள் மாற்றுத்திறனாளி என்ற அடையாளத்தினை மாற்றி வேறு ஒரு அடையாளத்தினை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்கள் தங்களின் புத்தாண்டினை எவ்வாறு எதிர்கொள்ள இருக்கிறார்கள் என்பதை பகிர்ந்து கொண்டனர்.

அதில் ஒருவரான மதுரையை சேர்ந்த அமுல்யா ஈஸ்வரி, ஓட்டப் பந்தய வீராங்கனை. விளையாட்டுத் துறையில் பல வெற்றிகளை குவித்து வரும் இவர் தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். ‘‘நான் தற்போது மதுரையில் இளங்கலையில் இறுதியாண்டு பயின்று வருகிறேன். மாற்றுத்திறனுடன் வளர்வது எளிதான காரியம் அல்ல. வாழ்க்கையில் பல சவால்களை கடந்து வர வேண்டி இருக்கும். தொடக்கத்தில் நான் சந்தித்த மிகப்பெரிய சவாலே, என்னை பார்ப்பவர்கள் அனைவரும் என்னால் விளையாட முடியுமா என்ற சந்தேகத்துடனும், பரிதாபத்தோடும் பார்த்தனர். சில சமயம் போட்டிகளில் பங்கேற்கும் போது, ‘அவளால் முடியாது’ என்ற வார்த்தைகளை கேட்கும் போது மனது வலிக்கும். உடல் ரீதியாகவும் பயிற்சி நேரங்களில் சிரமம் இருந்தது. ஆனால், அதனை கடந்து செல்லும் சக்தி எனக்குள் தானாகவே உருவானது.

மாற்றுத்திறன் என்பது குறை அல்ல, அது வேறுபாடு. அந்த வேறுபாடே நம்மை தனித்துவமாக்குகிறது. உடலில் சில வரம்புகள் இருக்கலாம். ஆனால், எங்களின் முயற்சி, மன உறுதியில் எந்த வரம்பும் இல்லை என்பதை நான் நிரூபித்து வருகிறேன். அதுபோல் எங்களை இயலாதவர்களாக பார்க்க வேண்டாம். எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடி வெற்றிப் பெறுபவர்கள்தான் நாங்கள். ‘நீ வேறுபட்டவள், வலிமையானவள்’ என்று எனக்குள் தன்னம்பிக்கையை கொடுத்தவர்கள் என் கல்லூரியின் ஆசிரியர்களும், என் அம்மாவும்தான்.

கடந்த 2024ல் தாய்லாந்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் 1,500, 800 மீட்டர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றேன். கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கேலோ இந்தியா பாரா கேம்ஸ் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் பெற்றேன். அதே வருடம் செப்டம்பர் மாதம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான மாற்றுத்திறனாளிகள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றேன். இது போல பல வெற்றிகளையும், பதக்கங்களையும் தொடர்ந்து குவித்து வருகிறேன்.

புத்தாண்டு என்பது காலண்டரில் உள்ள தேதி மாற்றம் மட்டுமல்ல… இந்தாண்டு நம்முடைய இலக்கினை நிர்ணயித்து அதற்கேற்ப நம்மை தயார் செய்து கொள்வதுதான். நாம் யார் என்று கேட்பதை விட, நம்மால் என்ன சாதிக்க முடியும் என்று கேட்கச் சொல்லும் ஒரு நம்பிக்கையின் தொடக்கம். வருகிற புத்தாண்டில், எனக்கான வாய்ப்புகளை சாதகமாக்கிக் கொண்டு முன்னேற்றப் பாதையில் செல்வேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது’’ என்றார் அமுல்யா. அவரைத் தொடர்ந்து குண்டு எறிதல் வீராங்கனையான அர்ச்சனா பேசினார்.

‘‘எனது பூர்வீகம் புதுக்கோட்டை அருகிலுள்ள செங்கீரை என்ற கிராமம். அப்பா கோயில் அர்ச்சகராக வேலை பார்க்கிறார். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது திடீரென கால் எலும்பு வளர்ச்சி சார்ந்த பிரச்னை ஏற்பட்டது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. நானும் அன்று முதல் மாற்றுத்திறளாளி என்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு வருடம் பள்ளிக்கு கூட செல்லாமல் வீட்டிலேயே முடங்கிப் போனேன். என் பெற்றோர் மற்றும் தோழிகளின் அரவணைப்புதான் என்னை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்றது. 10ம் வகுப்புத் தேர்வினை எழுதினேன். அதில் தேர்ச்சிப் பெற்று 11ம் வகுப்பில் சேர்ந்தேன். அங்கு தான் என்னுடைய விளையாட்டுத் திறமைக்கு அடையாளமும் கிடைத்தது. தற்போது கல்லூரியில் வணிகவியல் துறையினை தேர்வு செய்து படித்து வருகிறேன்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிராம விளையாட்டுக் குழு போட்டிகள் சார்பில் நடைபெற்ற கிராம ஊராட்சி அளவிலான விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம், குண்டு எறிதல் மற்றும் கபடியில் 2வது இடம் பிடித்தேன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024ம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றேன். அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டில் அண்மையில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான மாற்றுத்திறனாளிகள் குண்டு எறிதல் போட்டியிலும் தங்கப் பதக்கமும், 1 லட்சத்திற்கான காசோலையும் பெற்றேன். இந்த வெற்றிகள் எல்லாம் நான் மாற்றுத்திறனாளி என்பதை மறப்பதற்கு கடவுள் எனக்கு கொடுக்கும் வரம் என்று சொல்ல வேண்டும். என்னை மாற்றுத்திறனாளியாக பார்க்காமல், என் திறமையை புரிந்து கொண்டு அதனை வெற்றிப் பாதையில் அழைத்து சென்ற என் கல்வி நிறுவனத்தின் தலைவர் தனசேகரன், இயக்குநர் மற்றும் முனைவரான குமுதா, முதல்வர் கவிதா மற்றும் என் உடற்பயிற்சியாளர்களுக்கு நான் என் நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

துவங்க இருக்கும் புத்தாண்டில் என் நேரத்தை மிக மதிப்புடன் பயன்படுத்த விரும்புகிறேன். புத்தாண்டு என் வாழ்க்கையில் இன்னொரு சாதனை அத்தியாயமாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

அரசு வங்கிப் பணியாளரான சக்திஸ்ரீ கூறும் பொழுது… ‘‘கோவை, பொள்ளாச்சி தான் என்னுடைய ஊர். அப்பா வட்டாச்சியராகவும், அம்மா துணை ஆட்சியராகவும் வேலை பார்த்தனர். கடந்த 2013ல் அப்பா இறந்து விட்டார். செரிபிரல் பால்ஸி எனப்படுகிற மூளை முடக்குவாத பாதிப்பு எனக்கு ஏற்பட்டு இருப்பதாக டாக்டர் சொன்ன போது என் பெற்றோர் மிகவும் கலங்கிவிட்டனர்.

எனக்கு வந்திருக்கும் பிரச்னை குழந்தைப் பருவத்திலேயே ஏற்படும் பாதிப்பு. நரம்பு பாதிப்படைவதால் கை, கால் அசைவது, நடப்பது போன்ற செயலையும் பாதிக்கும். பொதுவாக கர்ப்ப காலத்தில் அல்லது பிறந்த சிறிது காலத்தில் இந்த நிலை ஏற்படும். நான் நன்றாக பேசுவேன். ஆனால், என்னுடைய இரண்டு கால்கள் மற்றும் ஒரு கைதான் பாதிக்கப்பட்டு இருந்தது. பிசியோதெரபி உடற்பயிற்சி தொடர்ந்து எடுத்ததால், என்னால் 80% நடக்க முடியும். கை 90% செயல்படும்.

நான் கல்லூரிப் படிப்பு முடித்த பிறகு, வங்கிப் பணிக்கான தேர்வு எழுத வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காக என்னை தயார் படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன். ஆனால், ‘உன்னால் எழுத முடியுமா..? கேள்விகள் கடினமாக இருக்கும்’ என்று பலரும் என்னை டீமோடிவேட் செய்தார்கள். இது போன்ற தேர்வுகள் கடினமாகத்தான் இருக்கும். அதனால் நான் கடினமாக பயிற்சி மேற்கொண்டேன். தினமும் ஆறு மணி நேரம் இதற்காக செலவு செய்தேன். வெற்றியும் பெற்றேன். பணிக்கான ஆணை மற்றும் வங்கிக்குள் முதலில் நுழைந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது.

எங்களுக்கான வாய்ப்புகள் நிறைய வர வேண்டும். உடல்நிலை பார்த்து தகுதியை நிர்ணயம் செய்யாமல், அவர்களின் திறமைக்கு மதிப்பளிக்க வேண்டும். புத்தாண்டில் வாக்கர் இல்லாமல் தனித்து நடக்க பழக வேண்டும். சுற்றுலா இடங்களுக்கு பயணிக்க வேண்டும். அங்குள்ள சிறப்பம்சங்களை என் கவிதை மூலமாக வெளிப்படுத்த வேண்டும்’’ என்றவர், கவிதை நூல்கள் மற்றும் சிறுவர்களுக்கான கதைகளையும் எழுதியுள்ளார்.

தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்

Tags : Kumkum ,Year… ,
× RELATED குத்துச் சண்டையை தேர்வு செய்யாமல்...