கமுதி, ஜன. 3: கமுதி அருகே அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் அய்யன்கோயில்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் மயான சாலை வசதி இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இறந்த மூதாட்டி ஒருவரின் சடலத்துடன் கமுதி -அருப்புக்கோட்டை சாலையின் நடுவே வைத்து மயானச் சாலை வசதி செய்து தர வேண்டி கோஷமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கிராம மக்களிடம் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தி, சாலை வசதி செய்து தரப்படும் என்று உறுதியளித்தன் பேரில் சாலை மறியலை கைவிடப்பட்டது.
