வருசநாடு, ஜன.1: வருசநாடு கூட்டுறவு வங்கியில், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி ரசீதை ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் வழங்கினார். வருசநாடு கூட்டுறவு சங்கத்தில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், மொத்தம் 648 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 300 பேருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 348 விவசாயிகளுக்கு தள்ளுபடி வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய தள்ளுபடி சலுகையை வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகாரிகளிடம் மனு அளித்தும், பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜனிடமும் விவசாயிகள் நேரில் சந்தித்து முறையிட்டனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் பேசி தள்ளுபடி நடைமுறைகளை விரைவுபடுத்த அவர் நடவடிக்கை எடுத்தார். இதன் பலனாக, விடுபட்ட 348 பயனாளிகளுக்கும் தற்போது பயிர் கடன் மற்றும் நகைக்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்களை வருசநாடு கூட்டுறவு சங்கத்தில், விவசாயிகளிடம் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி, தங்கப்பாண்டி, தேனி கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் செல்வராஜ், கூட்டுறவுத்துறை செயலாட்சியர் சரவணன், வருசநாடு எம்பி 92 கூட்டுறவு செயலர் கார்த்தீபன் மற்றும் பணியாளர்கள், திமுக நிர்வாகிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
