கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், 3 நாள் பயணமாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு சென்றுள்ளார். கொல்கத்தாவில் நேற்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: அந்நியர்கள் ஊடுருவல் குறித்து மேற்கு வங்க மக்கள் கவலையுடன் உள்ளனர். இங்குள்ள எல்லை வழியாக நடக்கும் ஊடுருவல் என்பது மேற்கு வங்கத்தின் பிரச்னையல்ல.
இதன் மூலம் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. அதில் ஊடுருவல்காரர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதுதான் பிரதான பிரசாரமாக இருக்கும். 2026 தேர்தலில் இங்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பாஜ ஆட்சிக்கு வரும். அதன் பின் இந்த ஊடுருவலை முடிவுக்கு கொண்டு வருவோம். அதற்காக வலுவான தேசிய பாதுகாப்பு வேலி அமைக்கப்படும். அதை தாண்டி மனிதர்கள் மட்டுமல்ல, பறவைகள் கூட ஊடுருவ முடியாது.
அதுமட்டுமின்றி, அனைத்து ஊடுருவல்காரர்களையும் ஒருவர் பின் ஒருவராக அடையாளம் கண்டு அவர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றும் பணியையும் பாஜவின் மேற்கு வங்க அரசு செய்யும். இந்தியா-வங்கதேசம் எல்லையில் வேலி அமைக்கும் பணியை ஒன்றிய அரசால் முடிக்க முடியவில்லை. ஏனென்றால் அதற்கு தேவையான நிலத்தை மம்தா பானர்ஜி அரசு தரவில்லை.
அசாம், திரிபுரா, பஞ்சாப், காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற நாட்டின் மேற்கு மாநிலங்களை விட மேற்கு வங்கத்தில் ஊடுருவல் பிரச்னை ஏன் மிகவும் தீவிரமாக உள்ளது என்பதற்கு முதல்வர் மம்தா பதிலளிக்க வேண்டும். இது ஏன் மேற்கு வங்கத்தில் மட்டும் நடக்கிறது? ஏனென்றால், உங்கள் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இங்கு ஊடுருவல் நடக்கிறது.
இதன் விளைவாக, உங்கள் வாக்கு வங்கியை வலுப்படுத்த மாநிலத்தின் மக்கள்தொகை மெதுவாக சீராக மாற்றப்படுகிறது. மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், கிழக்கு எல்லைகளில் இருந்து ஊடுருவலைத் தடுத்து, மேற்கு வங்கத்தின் மறுமலர்ச்சியை உறுதி செய்வோம். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
* துச்சாதனன் வந்திருக்கிறார்
பாங்குரா மாவட்டத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் துரியோதனனும், துச்சாதனனும் இங்கு வருவார்கள். இன்று மேற்கு வங்கத்திற்கு துச்சாதனன் வந்திருக்கிறார். ஊடுருவல் மேற்கு வங்கத்தில் மட்டும் தான் நடக்கிறதா? காஷ்மீரில், டெல்லியில் நடக்கவில்லையா? மேற்கு வங்கம் மீது மட்டும் ஏன் குற்றம்சாட்டப்படுகிறது? பஹல்காம் தாக்குதல், டெல்லி கார் குண்டுவெடிப்புக்கு இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவியை அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் ’’ என்றார்.
