×

2026-27ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: வரும் 2026-27-ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டம் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இருக்கும் அதன் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக்கின் முன்னணி பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி, நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் மற்றும் நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் முக்கிய அம்சமாக வரும் பிப்ரவரி 1ம் தேதி வரவிருக்கும் ஒன்றிய பட்ஜெட் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தற்போதைய பொருளாதார நிலை குறித்த நிபுணர்களின் மதிப்பீடுகளையும், வளர்ச்சி வாய்ப்புகள், நிதி மேலாண்மை மற்றும் நீண்டகால வளர்ச்சியைத் தக்கவைக்கத் தேவையான கட்டமைப்பு நடவடிக்கைகள், எதிர்கால முன்னுரிமைகள், வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கவும், வளர்ந்து வரும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சவால்களை முன்கூட்டியே எதிர்கொள்வது குறித்தும் பொருளாதார நிபுணர்கள் தரப்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா விதித்துள்ள 50சதவீத வரியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வரும் ஒன்றிய பட்ஜெட் எவ்வாறு சரிசெய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதைத்தொடர்ந்து அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்ளும் விதமாக நிதி ஆயோக் கூட்டத்தின் தேதி விரைவில் அறிவிக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Modi ,New Delhi ,Finance Minister ,Nirmala Sitharaman ,Union Budget ,NITI ,Aayog ,Delhi ,Narendra Modi ,
× RELATED பெய்ரேலியில் நாய் கடித்ததால் ரேபிஸ்...