கீழ்பென்னாத்தூர், டிச. 30: கீழ்பென்னாத்தூர் அரசு பள்ளியில் 47 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அவர்களது பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1978-1980ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் 47ம் ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திப்பு நிகழ்ச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. முன்னாள் மாணவர் ஜாகிர்உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி மகிழ்வித்தனர். மேலும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.7 ஆயிரம் மதிப்பில் நாற்காலி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பில் ஒலிபெருக்கி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் பயிலும்போது பணிபுரிந்த பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளை பேசினர். இப்போது சந்தித்துள்ள முன்னாள் மாணவர்களில் 75 சதவீதம் பேர் அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் முன்னாள் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
