சென்னை: அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அதிமுக ஆட்சியில் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். அத்தகைய 20,000 ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் காலமுறை ஊதியம் வழங்கும் என்று திமுக வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பலமுறை அரசு பேச்சுவார்த்தை நடத்தியும், இதற்கென தனிக் குழுவை அமைத்தும், இடைநிலை ஆசிரியர்களுக்கான சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் பள்ளி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தினை உணர்ந்து, அவர்களை அழைத்துப் பேசி, அதனை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
