×

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 4 மாநகராட்சிகள், 10 நகராட்சிகளில் கவுன்சிலர்கள் எண்ணிக்கை நிர்ணயம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 4 மாநகராட்சிகள் மற்றும் 10 நகராட்சிகளில் கவுன்சிலர்கள் எண்ணிக்கையை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் இருக்கின்றன. அந்த வகையில் மிகப்பெரிய பேரூராட்சியாக இருப்பதை நகராட்சியாகவும், நகராட்சியை மாநகராட்சியாகவும் தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தார்கள்.

மாநகராட்சியாக தரம் உயர்த்துவதன் மூலம் அப்பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க முடியும். இதன்படி புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று அதன் அருகில் உள்ள ஊராட்சி, பேரூராட்சிகளை இணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் கடந்த 30.3.2023 அன்று அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பினை செயல்படுத்துவது தொடர்பாக உரிய பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்கும் நடைமுறைகளை தொடங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட் இருந்தார். அதன்படி புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சியும், திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையில் உள்ள பகுதிகளை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சியும், நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை இணைத்து நாமக்கல் மாநகராட்சியும், காரைக்குடி நகராட்சி மற்றும் 2 பேரூராட்சி, 5 ஊராட்சிகளை இணைத்து காரைக்குடி மாநகராட்சியும் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து 4 புதிய மாநகராட்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சியின் வாயிலாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12ம் தேதி தொடங்கி வைத்தார். இதன்மூலம் தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசிதழில், ‘‘புதிதாக உருவாக்கப்பட்ட திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 மாநகராட்சிகளில் ஒவ்வொரு மாநகராட்சிகளிலும் 48 கவுன்சிலர்கள் இடம்பெறுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு, போளூர், செங்கம், கன்னியாகுமரி, சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 10 நகராட்சிகளில் ஒவ்வொரு நகராட்சிகளிலும் தலா 22 கவுன்சிலர்கள் இருப்பார்கள்” என்று தமிழக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu government ,Chennai ,Tamil Nadu ,
× RELATED கூட்டணி இன்னும் அமையாததால் விரக்தி...