- முதல்வர் எம் கே ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- சேகர்பாபு
- சென்னை
- காளிகாம்பாள் காமடேஸ்வரர் கோவில்
- மண்ணடி, சென்னை
- சபரிமலா...
சென்னை: தமிழகத்தில் 2026ம் ஆண்டில் 2வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைப்பதை எந்த பாசிச, தீய சக்திகளாலும் தடுக்க முடியாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழ்நாடு கோயில் உபயதாரர்கள் சார்பில் சென்னை, மண்ணடி காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோயிலில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கிடும் வகையில் 2ம் கட்டமாக 5 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகளை 4 கன்டெய்னர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்றுவரை 3,956 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. மூலவர் மீது சூரிய ஒளிபடும் வகையில் கட்டப்பட்ட தொன்மையான சென்னை, வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலை ஆறடி பள்ளத்திலிருந்து உயர்த்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கோயில் 4 ஆயிரமாவது கோயில் குடமுழுக்காக வருகிற பிப்ரவரி 8ம் தேதி நடைபெற உள்ளது.
1,068 கோயில்களுக்கு சொந்தமான ரூ.8,258 கோடி மதிப்பிலான 8,027 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. அதிமுக இயக்கத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் எவ்வித நிபந்தனையுமின்றி சேருகிறோம் என்று அறிவித்தால்கூட, பாசிச மானங்கொண்ட எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுப்பதோடு பாசிசத்தை பற்றி அவர் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது.
தமிழ்நாட்டில் பிரிவினையை தூண்டும் சிலரின் எண்ணங்கள் இங்கு எடுபடாது. முதலில் தமிழ் கடவுள் முருகனை கையில் எடுத்து பார்த்தார்கள். எடுபடவில்லை. முருகன் கொஞ்சம்கூட அவர்களது பக்கம் திரும்பவில்லை. முழுவதும் எங்கள் முதல்வரின் பக்கம் இருப்பதால்தான் அவர்களது ஆட்டம் எடுபடவில்லை. பல வஞ்சக சூழ்ச்சிகளோடு பாஜ தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறது. இதனை மக்கள் நன்றாக புரிந்து வைக்கின்றனர்.
தொப்புள் கொடி உறவாக சிறுபான்மையினர் திமுகவோடுதான் பயணிப்பார்கள். 2026ம் ஆண்டில் 2வது முறையாக முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைப்பதை எந்த பாசிச, தீய சக்திகளாலும் தடுக்க முடியாது. அரசியல் வேறு, ஆன்மிகம் வேறு. ஆன்மிகத்தை, கலைகளை வளர்த்தெடுங்கள் என்றுதான் நாங்களும் கூறுகிறோம். ஆனால் கலவரத்தைதான் வளர்ப்போம் என்று கூறும் சக்திகளுக்கு இங்கு இடமில்லை.
குத்தம்பாக்கம் பேருந்து முனையம் மற்றும் செங்கல்பட்டு பேருந்து நிலையம் முதல்வரால் வரும் ஜனவரி மாத இறுதிக்குள் திறக்கப்பட்டு பயணிகளின் போக்குவரத்து வசதிக்கு அர்ப்பணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் மங்கையர்க்கரசி, சிறப்பு பணி அலுவலர் சி.லட்சுமணன், இணை ஆணையர்கள் முல்லை, சு.மோகனசுந்தரம், உதவி ஆணையர் க.சிவக்குமார், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் இ.எம்.எஸ்.மோகன் மற்றும் அறங்காவலர்கள், காளிதாஸ் சிவாச்சாரியார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
