சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடந்த சிறப்பு முகாமில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை மீண்டும் சேர்க்க ஆர்வமுடன் விண்ணப்பம் செய்தனர். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, கணக்கீட்டு கட்டத்தின் போது கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பித்த வாக்காளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் 19.12.2025 முதல் 18.1.2026 வரை தாக்கல் செய்யப்பட்டு, அதே காலகட்டத்திற்குள் பரிசீலித்து முடிவு செய்யப்படும்.
அறிவிப்பு காலகட்டமானது டிசம்பர் 19 முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை ஆகும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் வழிகாட்டுதல்களின்படி, விவரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டிய வாக்காளர்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர் / உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மூலம் அறிவிப்புகள் வழங்கப்படும். இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள 13 ஆவணங்களில் தங்களுக்கு பொருந்தக்கூடிய ஆவணத்தை வாக்காளர்கள் விசாரணையின்போது சமர்ப்பிக்க வேண்டும்.
ஆவணங்கள் முறையாக சரிபார்க்கப்பட்ட பின், தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் முடிவு செய்வர். மேலும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு, வாக்காளர் பதிவு அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி இந்த நடைமுறை குறித்து விளக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் 17.2.2026ல் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று வரை வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை மீண்டும் சேர்க்க 1,85,277 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதேபோன்று, ஆட்சேபனை மற்றும் முகவரி மாற்றம் செய்ய 1,726 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் வசதிக்காக நேற்றும், இன்றும் தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. அதன்படி நேற்று பலரும் ஆர்வமுடன் முகாம்களுக்கு சென்று புதிய மற்றும் விடுபட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர படிவம்-6ஐ பூர்த்தி செய்து வழங்கினர். இந்த சிறப்பு முகாம் இன்றும் (28ம் தேதி) நடைபெறும். அதேபோன்று வருகிற ஜனவரி மாதம் 3 மற்றும் 4ம் தேதி (சனி, ஞாயிறு) மீண்டும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
