சென்னை: தாம்பரம் அருகே கட்சி மேலிடம் வழங்கிய பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் பாஜ நிர்வாகி வீட்டை சூறையாடிய பாஜ மாநில இளைஞரணி துணை தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக மாநில இளைஞரணி தலைவர் சூர்யா அறிவித்துள்ளார். தாம்பரம் அருகே முடிச்சூர், வரதராஜபுரம் பிடிசி குடியிருப்பை சேர்ந்தவர் ஓம்சக்தி செல்வமணி (50). ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி பாஜ அமைப்பாளராக இருந்து வருகிறார்.
இவர், தற்போது ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவது சம்பந்தமாக, அக்கட்சியின் உயர்மட்ட தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 25ம்தேதி இரவு செல்வமணி வீட்டில் அத்துமீறி நுழைந்த மர்ம கும்பல், இரும்பு ராடு உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களால், அங்கு நிறுத்தி வைத்திருந்த 2 கார்களின் கண்ணாடிகள் மற்றும் பைக்கை அடித்து சேதப்படுத்தியுள்ளது.
இதை கண்டு, அதிர்ச்சியடைந்த ஓம்சக்தி செல்வமணி, இதுகுறித்து மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில், போலீசார் நடத்திய விசாரணையில் செல்வமணிக்கும், மணிமங்கலம் பகுதியை சேர்ந்த மாநில பாஜ இளைஞரணி துணை தலைவரான அமர்நாத் (32) என்பவருக்கும் உள்கட்சி பூசல் இருந்து வந்துள்ளது. அதாவது, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது, மேலிடம் வழங்கிய பணத்தை செலவு செய்யாமல் செல்வமணி அப்படியே வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட செல்வமணி முயன்றார். ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தேர்தல் செலவுக்காக கட்சி மேலிடம் வழங்கிய பணத்தை பிரித்து வழங்காமல் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதை அமர்நாத் கேட்டபோது, தனது அலுவலகத்துக்கு அழைத்து செல்வமணி தாக்கியுள்ளார். அதேபோன்று, வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சி மேலிடம், மீண்டும் செல்வமணியிடம் பணம் வழங்கியுள்ளது. அந்த பணத்தையும் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்காமல் கையாடல் செய்து விட்டாராம்.
உடனே அமர்நாத், கட்சி நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தி, செல்வமணியிடம் பணத்தை பெற்று கொள்ளுங்கள் என்று வாட்ஸ்அப்பில் மெசேஜ் போட்டுள்ளார். இதனால் செல்வமணி ஆத்திரமடைந்தார். இந்நிலையில் கட்சி கூட்டத்தின்போது, வரவு- செலவு கணக்குகளை செல்வமணியிடம் அமர்நாத் கேட்டுள்ளார். அதற்கு செல்வமணி, `ஏற்கனவே ஒருமுறை வாங்கியது போதாது, இன்னும் கொடுத்தால்தான் சரிபடுமோ’ என நிர்வாகிகளின் முன்னிலையில் அமர்நாத்தை கடுமையாக திட்டியுள்ளார்.
இதை, நண்பர்களிடம் கூறி அமர்நாத் வருந்தியுள்ளார். மேலும், சம்பவம் தொடர்பாக ஒரு வீடியோவாகவும் அமர்நாத் வெளியிட்டிருந்தார். இந்நிலையில்தான் செல்வமணி வீட்டின் மீதான தாக்குதல் நடந்துள்ளது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, அமர்நாத் உள்பட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே அவரது ஆதரவாளர்களான பிரகாஷ், தினேஷ், சஞ்சய், யோகேஸ்வரன் மற்றும் 15 வயது சிறுவன் என 5 பேரை, போலீசார் கைது செய்தனர்.
அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும், மற்ற 4 பேரையும் சிறையிலும் அடைத்தனர். இந்நிலையில் அமர்நாத், யோகேஸ்வரன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலிலும் ஈடுபட்டதால், அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். ஆகவே, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துகொள்ள வேண்டாம் என மாநில இளைஞரணி தலைவர் சூர்யா தெரிவித்துள்ளார்.
* சமரசம் செய்ய முயன்ற போலீஸ்
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் அவர்களை கண்டுகொள்ளவில்லை. சம்பவம் நடந்தவுடன் செல்வமணி போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார், உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் சமாதானமாக செல்லும்படி இரு தரப்பையும் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் வழக்குப்பதிவு செய்வதிலும், குற்றவாளிகளை கைது செய்வதிலும் சுணக்கம்காட்டி வந்தனர்.
பத்திரிகைகளுக்கு தெரிந்த பிறகே குற்றவாளிகளை கைது செய்யும் முடிவை போலீசார் எடுத்தனர். மேலும் குற்றவாளிகள் குறித்த தகவல்களையும் போலீசார் மறைத்தனர். குற்றவாளிகளுடன் போலீசார் ரகசிய கூட்டு வைத்திருப்பதால்தான் இந்த வேலைகளை செய்து வருகின்றனர். சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், மணிமங்கலம் பகுதிகளில் அடிக்கடி கொலைகள் நடப்பதற்கு போலீசார், குற்றவாளிகளுடன் கூட்டு வைத்திருப்பதுதான் காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
