சென்னை: தமிழ்நாடு அரசின் 2025-26ம் நிதியாண்டு பட்ஜெட்டில், ‘தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், இன்ஜினியரிங், டிப்ளமோ வேளாண்மை, மருத்துவம் உள்பட அனைத்து கல்லூரிகளிலும் படிக்கும், மாணவ – மாணவியருக்கு, முதல் கட்டமாக 2 ஆண்டுகளில், 20 லட்சம் ‘டேப்லெட்’ அல்லது ‘லேப்டாப்’ வழங்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டது. இதற்காக, ரூ. 2,000 கோடி ஒதுக்கப்பட்டது.
‘லேப்டாப்’ கொள்முதல் செய்வதற்காக, தமிழக அரசின் எல்காட் நிறுவனம், கடந்த மே மாதம் சர்வதேச டெண்டர் கோரியது. பல முன்னணி நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றன. இவற்றில், ‘ஏசர்’ மற்றும் ‘டெல்’ நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஏசர் நிறுவனம், ஒரு ‘லேப்டாப்’ ரூ. 23,385 விலையில், 14 அங்குல திரையுடனும், டெல் நிறுவனம் ஒரு லேப்டாப் ரூ. 40,828 விலையில், 15.6 அங்குல திரையுடனும் வழங்க ஒப்புதல் அளித்தன.
முதல் கட்டமாக, 10 லட்சம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், இறுதியாண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டு படிக்கும், மாணவ – மாணவியருக்கு, இலவச ‘லேப்டாப்’ வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை, வருகிற ஜனவரி 5ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், கல்லூரி மாணவர்களைப் போல், தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவியருக்கும், இலவச ‘லேப்டாப்’ வழங்க ஆலோசிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, தனியார் கல்லூரியில், புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டத்தின் வாயிலாக, மாதந்தோறும் ரூ. 1,000 பெறுபவர்கள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் மாணவ-மாணவியர்க்கு, இலவச ‘லேப்டாப்’ வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கூடுதலாக எவ்வளவு செலவாகும், எவ்வளவு மாணவர்கள் உள்ளனர் என, உயர் கல்வித்துறை கணக்கெடுத்து வருகிறது. விரைவில், அரசாணை வெளியாகிறது.
