×

பிரதமர் அலுவலகத்தில் உயர் பதவி? பிரசார் பாரதி மாஜி தலைவர் மீது ரூ.112 கோடி ஊழல் புகார்: காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பிரசார் பாரதியின் தலைவராக இருந்த நவ்னீத் குமார் கேசல், கடந்த 2ம் தேதி ராஜினாமா செய்தார். இவருக்கு பிரதமர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் பவன் கேரா விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உத்தரப்பிரதேச அரசு திட்டத்தில் கடந்த 2019-20 முதல் 2021-22ம் நிதியாண்டு வரையிலும் ரூ.112 கோடிக்கு முறைகேடு நடந்திருப்பதாகவும் அதில் பிரசார் பாரதி முன்னாள் தலைவர் நவ்னீத் பெரும் பங்கு லாபம் அடைந்திருப்பதாகவும் வருமான வரித்துறை 254 பக்க ரகசிய அறிக்கை தயாரித்தது. அந்த அறிக்கை தொடர்பாக நவ்னீத் விளக்கத்தை தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டு பிரசார் பாரதி தலைவராக நியமிக்கப்பட்டார்.

இப்போது நவ்னீத், பிரதமர் மோடி அலுவலகத்தின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இப்பதவியில் தற்போதுள்ள ஹிரேன் ஜோஷி சூதாட்ட செயலி ஊழல் விவகாரத்தில் சம்மந்தப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. பிரதமர் அலுவலகத்தில் ஒரு ஊழல் அதிகாரிக்கு பதிலாக இன்னொரு கறை படிந்த அதிகாரியை மாற்றுவது ஏன்? இது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகாதா? இது குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? இவ்வாறு கூறினார்.

Tags : Prime Minister's Office ,Prasar Bharati ,Congress ,New Delhi ,Navneet Kumar Keshal ,Union Ministry of Information and Broadcasting ,
× RELATED உலகம் முழுவதும் 81 நாடுகளில் இருந்து...