×

விடுமுறையை முன்னிட்டு குவிந்தனர் கொடைக்கானலில் வாகனங்கள் 5 கிமீ தூரம் நீண்ட அணிவகுப்பு

கொடைக்கானல் : கொடைக்கானலில் களைகட்டும் உறை பனி சீசனை அனுபவிக்கவும், பள்ளி தேர்வு விடுமுறையை கொண்டாடவும் சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகி வாகனங்கள் 5 கிமீ தூரம் வரை அணிவகுத்து நின்றன. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது.

`மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் இங்கு, தற்போது கடும் உறைபனி சீசன் நிலவுகிறது. நட்சத்திர ஏரி புல்வெளி, பாம்பார்புர‌ம், அப்ச‌ர்வேட்ட‌ரி, பியர் சோழா சாலை உள்ளிட்ட ப‌ல்வேறு பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகளளவில் காணப்படுகிறது.

பசுமை புல்வெளிகளில் உறைபனி படர்ந்து வெள்ளை கம்பளம் விரித்தது போல் காட்சிய‌ளிப்பதுடன் வாக‌ன‌ங்க‌ளின் மேற்ப‌ர‌ப்பிலும் உறைபனி படர்ந்து காணப்படுகிறது.

இருப்பினும், கடும் குளிரை பொருட்படுத்தாமல் காலை நேரம் சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன் பனி சூழ்ந்த புல்வெளியை ரசித்து வருகின்றனர். பனிக்கட்டிகளை கைகளில் சேகரித்து ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச்சாவடி, சீனிவாசபுரம், உகார்த்தே நகர், மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி மற்றும் சுற்றுலா தல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகி வாகனங்கள் சுமார் 5 கிமீ தூரம் வரை அணிவகுத்து நிற்கும் சூழல் உண்டாகியது. சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பால் அனைத்து சுற்றுலா தொழில் புரிவோரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெப்பநிலை 4 டிகிரி மக்கள் கடும் அவதி

கொடைக்கானலில் நேற்று முன்தினம் பகலில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. இரவில் வெப்ப‌நிலை 8 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது. நேற்று அதிகாலை நிலவரப்படி 4 டிகிரி செல்சியசுக்கும் குறைவான வெப்ப நிலை பதிவானது. கொடைக்கானலில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடும் குளிர் நிலவுவதால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு காலையில் தங்களது அன்றாட பணிகளை தாமதமாகவே துவக்குகின்றனர்.

சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச்சாலையில் பெருமாள் மலை அருகே நேற்று திடீரென ராட்சத மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் ஓரம் இலகுரக வாகனங்கள் மட்டுமே சென்ற நிலையில் கனரக வாகனங்களான பஸ், லாரி, வேன் உள்ளிட்டவை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் உள்ளூர் மக்கள், சுற்றுலாப்பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

100க்கும் மேற்பட்ட வாகனங்கள் இருபுறமும் சுமார் 5 கிமீ தூரத்திற்கு மதியம் 3.30 மணியளவில் துவங்கி மாலை 5.30 மணி வரை அங்கேயே காத்திருந்தன. அதன்பிறகும் மரத்தை அகற்ற யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள், சுற்றுலாப்பயணிகள் சாலையை மறித்தனர்.

தகவலறிந்து வனத்துறைனர் சம்பவ இடத்திற்கு வந்து இயந்திரம் மூலம் மரத்தினை அறுத்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். மரம் விழுந்த சமயம் சாலையில் எந்த வாகனமும் கடந்து செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஆபத்தான முறையில் இளைஞர்கள் பயணம்

கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி நேற்று முன்தினம் கொடைக்கானலுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் உண்டாகி வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

அச்சமயம் பாம்பார்புரம் மலைச்சாலையில் சுற்றுலா வந்த சில இளைஞர்கள் காரில் வெளிப்புறமாக நின்றபடி பயணித்து நடனமாடி மகிழ்ந்தனர். இதுபோல் ஆபத்தான முறையில் பயணிக்கும் சமயம் மலைச்சாலை வளைவில் வாகனம் திரும்பும் போது விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே போலீசார் இதுபோல் பயணிக்கும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Kodaikanal ,Dindigul district ,
× RELATED திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி,...