திண்டுக்கல் டிச. 27: திண்டுக்கல் அருகே தோட்டனூத்து இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் குமார் (45). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தோட்டனூத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே குமாரபாளையம் ரோட்டில் நண்பர் கங்காதரனுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி குமார் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம் பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து குமார் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
எஸ்ஐ சித்திக், சிறப்பு எஸ்ஐ வனராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மேட்டூர் பகுதியை சேர்ந்த தங்கமணி (30), பகவான் ராமதாஸ் நகரை சேர்ந்த பாலசுப்பிரமணி (40) ஆகியோர் குமாரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தங்கமணி, பாலசுப்பிரமணியை கைது செய்தனர்.
