சென்னை: சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த பேட்ரியா செக்யூரஸ் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் 153 இடங்களில் 459 சிசிடிவி கேரமராக்களை செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கண்காணிப்பின் தடையற்ற ஒருங்கிணைப்புக்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான டெண்டரில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை.
எனவே, டெண்டரை ரத்து செய்ய வேண்டும். சிசிடிவி கேமரா திட்டத்தின் நோக்கம், தீர்வு, செயல்படுத்தல் ஆகியவற்றின் அம்சங்களை மதிப்பாய்வு செய்வதற்கும், கள சோதனைகளை சரிபார்க்கவும், டெண்டர் செயல்முறையை நிறைவேற்றவும் சென்னை ஐஐடி அல்லது அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொழில்நுட்ப உறுப்பினர், டிஜிபி, உளவுப் பிரிவு முதன்மை அதிகாரி மற்றும் தொழில்நுட்ப நிபுணர் ஆகியோரை கொண்ட குழுவை அமைக்க வேண்டும். டெண்டர் வெளிப்படைத்தன்மை விதிகளுக்கு முரணான டெண்டர் நடைமுறைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் சுரேஷ்குமார் ஆஜராகி, டெண்டர் காலம் டிசம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெண்டர் திருத்தத்திற்கு பதிலளிக்க ஏலதாரர்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து, டெண்டர் நடைமுறைகளுக்கு இடைக்கால தடை விதிக்காத நீதிபதி, விசாரணையை ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
