சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடக்கிறது. தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு உள்ளனர். அவர்கள் வாக்காளராக மீண்டும் சேர்வதற்கு மற்றும் விடுபட்டவர்கள், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர்களாக மீண்டும் சேர ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 18ம் தேதி வரை படிவம்-6ஐ பூர்த்தி செய்து வழங்கலாம்.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இதுவரை 1,83,111 படிவங்கள் பெயர் சேர்ப்பதற்காகவும் (படிவம் 6), பெயர் நீக்கத்திற்காக 1800 (படிவம் 7) அளிக்கப்பட்டுள்ளன. தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இறந்த வாக்காளர்கள் தவிர சுமார் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் சேர இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான கால அளவு இருக்கும் நிலையில், இதுவரை இரண்டு லட்சத்திற்கும் குறைவான 6ம் எண் படிவங்கள்தான் வந்துள்ளன. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடந்த வாரம் அறிவித்தார்.
அதன்படி, இந்த சிறப்பு முகாம் வருகிற 27, 28ம் தேதி (இன்று, நாளை) மற்றும் ஜனவரி 3, 4 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது. புதிய வாக்காளர்கள் படிவம்-6, முன்மொழியப்பட்ட வாக்காளர் சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்க அல்லது ஏற்கனவே உள்ள பதிவை நீக்க படிவம்-7, முகவரி மாற்றம், வாக்காளர் விவரங்கள் திருத்தம், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம், மாற்றுத்திறனாளிகள் வடிவம்-8ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19ம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இன்றும், நாளையும் நடைபெறும் சிறப்பு முகாமுக்கு சென்று (வழக்கமாக வாக்களிக்கும் மையம்) தங்கள் பெயர்களை மீண்டும் சேர்க்க படிவம்-6ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அவர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். அப்படி செய்தால்தான் வருகிற 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
