தெகுசிகல்பா: ஹோண்டுரஸ் அதிபர் தேர்தலில் டிரம்பின் ஆதரவு பெற்ற வலது சாரி கட்சி வேட்பாளர் நஸ்ரி ரிட்டோ அஸ்புரா வெற்றி பெற்றுள்ளார். லத்தீன் அமெரிக்காவில் அமைந்துள்ள மிக ஏழ்மையான நாடு ஹோண்டுரஸ். அந்த நாட்டின் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 30ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பல கட்டங்களாக எண்ணப்பட்டன. இதில் வலது சாரி தேசிய கட்சிக்கம் கன்சர்வேட்டிவ் லிபரல் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நடந்தது. இந்தநிலையில் தேர்தல் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் வலது சாரி தேசிய கட்சியின் வேட்பாளர் நஸ்ரி ரிட்டோ அஸ்புரா வெற்றி பெற்றுள்ளார். அஸ்புராவுக்கு 40.27 % வாக்குகள் கிடைத்துள்ளன. லிபரல் கட்சிக்கு 39.53 % வாக்குகள் கிடைத்துள்ளன என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஹோண்டுரஸ் தலைநகரான தெகுசிகல்பாவின் முன்னாள் மேயர் நஸ்ரி அஸ்புராவுக்கு அதிபர் டிரம்ப் தன்னுடைய முழு ஆதரவை அளித்தார். அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், தங்களுடைய நாட்டின் அடுத்த அதிபர் நஸ்ரி அஸ்புரா என மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். புதிய அதிபரை அமெரிக்கா வாழ்த்துகிறது. அந்த பகுதியின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக புதிய நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா ஆவலுடன் காத்து இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக லிபரல் கட்சியின் சல்வாடர் நஸ்ரல்லா குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலில் அஸ்புராவை ஆதரிப்பதாக டிரம்ப் கூறியதால் கடைசி நேரத்தில் முடிவுகள் மாறி விட்டன என நஸ்ரல்லாவும் இதர எதிர்க்கட்சியினரும் கூறியுள்ளனர்.
