×

கிறிஸ்துமஸ் உரையில் காசாவின் துயரங்களை நினைவு கூர்ந்தார் போப் லியோ: அமைதிக்கு அழைப்பு விடுத்தார்

வாட்டிகன்: போப் பதினான்காம் லியோ தனது முதல் கிறிஸ்மஸ் உரையில் காசா மக்களின் துயரங்களை நினைவு கூர்ந்தார். போர்களை பேச்சுவார்த்தையால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும் என வலியுறுத்தினார். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் விதமாக உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள வாட்டிகன் நகரத்தில் செயின்ட் பீட்டர்ஸ் பேராலயத்தில் போப் பதினான்காம் லியோ தனது முதல் கிறிஸ்துமஸ் தின உரையாற்றினார். அவரது பேச்சை கேட்க ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கூடியிருந்தனர். அப்போது பேசிய போப் லியோ, ‘‘பெத்லகேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் இயேசு பிறப்பின் மூலம் கடவுள் சரீரமானார். மனித உடல் என்பது தற்காலிகமான பலவீனமான கூடாரம் என்பது கடவுளின் வார்த்தைகள்.

அப்படியிருக்கையில், பல வாரங்களாக மழை, காற்று மற்றும் குளிரால் கூடாரங்களில் தவிக்கும் காசா மக்களையும், ஒவ்வொரு கண்டத்திலும் எண்ணற்ற அகதிகள் இடம்பெயர்ந்த மக்களையும், சொந்த நாட்டிலேயே வீடின்றி தவிக்கும் மக்களையும் எண்ணிப் பார்க்காமல் எப்படி இருக்க முடியும். பல போர்களால் லட்சக்கணக்கான பலவீனமான மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. ஆடம்பரமான பொய்யான பேச்சுக்களால் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்பந்திக்கப்பட்டு அவர்களை மரணத்திற்கு அனுப்புகின்றனர். இந்த ஒருதலைப்பட்சமான பேச்சுகள் தடைபட்டு, மனிதநேயத்திற்கு முன்னால் நாம் மண்டியிடும் போது அமைதி ஏற்படும். போர்களை பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே நிறுத்தி அமைதியை மலரச் செய்ய முடியும்’’ என்றார்.

Tags : Pope Leo ,Gaza ,Christmas ,Vatican ,Pope Leo XIV ,Jesus Christ ,
× RELATED 17 ஆண்டுகளுக்கு முன் வௌிநாடு சென்ற...