* ஜிஎஸ்டி கண்காணிப்பாளர், சுற்றுச்சூழல் அதிகாரியும் கைதாகின்றனர்
புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.2 ஆயிரம் கோடி போலி மருந்து வழக்கில் ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரியை சிறப்பு புலனாய்வு குழுவினர் அதிரடியாக கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த ஜிஎஸ்டி கண்காணிப்பாளர், புதுச்சேரியில் நடந்த போலி மருந்து விவகாரத்தில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதாக அடுத்தடுத்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி வருகின்றன. இவ்வழக்கில் போலி மருந்து தொழிற்சாலை நடத்திய முக்கிய குற்றவாளி ராஜா, போலி மருந்து தொழிற்சாலை ஒப்பந்ததாரரான என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் மணிகண்டன் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடியில் அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளன. இவர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின.
இதையடுத்து, கவர்னர் உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. முக்கிய குற்றவாளி ராஜா (எ) வள்ளியப்பனிடம் சிறப்பு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில், ‘போலி மருந்து தயாரிப்பு மூலம் கிடைத்த வருமானத்தில் ஜிஎஸ்டி செலுத்தாமல் இருக்க முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரி சத்தியமூர்த்தி ரூ.12 கோடி லஞ்சம் பெற்று உதவி செய்ததாகவும், இதற்கு புதுச்சேரி ஜிஎஸ்டி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் கண்காணிப்பாளர் பரிடா என்பவரும் உடந்தையாக இருந்து, பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாகவும் திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரி சத்தியமூர்த்தியை ஓசூரில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு புலனாய்வு குழுவினர் அதிரடியாக கைது செய்தனர். அவரை நேற்று விஜிலென்ஸ் அலுவலகம் கொண்டுவந்து விசாரணை நடத்தினர். மோசடிக்கு உடந்தையாக இருந்த ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் பரிடாவையும் கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், மருந்து தயாரிப்புப் பணியை சுற்றுச்சூழல் அதிகாரி ஆய்வு செய்வது, மருந்து நிறுவனங்கள் வெளியிடும் கழிவுகள், ரசாயனங்கள் போன்றவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறதா என சோதனை செய்ய வேண்டும்.
மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என உறுதி செய்ய வேண்டும். இது தொழிற்சாலை உரிமம் பெறவும், ‘‘பசுமை வேதியியல்’’ கொள்கைகளின்படி கழிவுகளைக் குறைக்கவும், மனித மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் முக்கியமானது. போலி மருந்து விவகாரத்தில் புதுவை சுற்றுச்சுழல் அதிகாரி ஒருவர், சில கோடிகளை வாங்கி கொண்டு கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டராம். இவரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் இறங்கி உள்ளனர். விசாரணைக்கு பின் இவரும் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
* பாஜ தலைவர், வேட்பாளர் போட்டியில் இருந்த சத்தியமூர்த்தி
புதுச்சேரி வனத்துறையில் துணை வனப் பாதுகாவலராக பணியாற்றியவர் ஐ.எப்.எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி. 2023ல் அந்தமானுக்கு இடமாற்றம் செய்யப்பட்டும் புதுச்சேரியிலே அவர் தங்கியிருந்தார். 2024ம் ஆண்டு புதுச்சேரி மக்களவை தேர்தலில் சத்தியமூர்த்தி பாஜவில் போட்டியிடலாம் என தகவல் வெளியாகின. வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் அந்தமானுக்கு செல்லாமல் இருந்தது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்ட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அவரை பணியிடை நீக்கம் செய்தது.
இதனிடையே சத்தியமூர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்து ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பி விட்டதாகவும் கூறப்பட்டது. அதன்பிறகு புதுச்சேரி பாகூர் தொகுதியில் மக்கள் நலப்பணிகளை சத்தியமூர்த்தி செய்து வருகிறார். பிரதமர் மோடி பிறந்தநாளில் தனது நிகழ்ச்சிக்கு கவர்னர் கைலாஷ்நாதனை வரவழைத்த, அவர் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனால் சட்டசபை தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிடலாம் முடிவு செய்து இருந்தார். முன்னதாக இவர் கவர்னர் கைலாஷ்நாதன் மூலம் புதுச்சேரி பாஜ தலைவர் பதவிக்கான போட்டியிலும் ஐ.எப்.எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி இருந்தார் என்பது குறிபிடத்தக்கது.
* வழக்கின் வேகத்தை குறைக்க சிபிஐ விசாரணை?
போலி மருந்து விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான ராஜா, கடந்த நான்கரை ஆண்டில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி ஆட்சியில் போலி மருந்து, மாத்திரைகள் படுவேகமாக தயாரித்து பல்வேறு மாநிலங்களிலும் அனுப்பி வைத்து உள்ளார். இதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்த அவர், அதிகாரிகள், ஆளும் அரசியலில் உள்ள பலரையும் பணத்தை வீசி தனது வலையில் வீழ்த்தி காரியத்தை சாதித்து உள்ளார். இதில் ஆளும் கூட்டணி கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகள் தொடர்பு இருப்பதால் அவர்களை போலீசார் நெருங்கி விட்டனர். இவ்விவகாரம், கூட்டணி ஆட்சிக்கு வேட்டு வைக்கும் நிலையில் உள்ளதால் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற கவர்னர் பரிந்துரை செய்துள்ளார். சிபிஐக்கு இவ்வழக்கு சென்றால் விசாரணை தாமதம் ஆகும். அதற்குள் சட்டமன்ற தேர்தல் வந்துவிடும். பாஜ கூட்டணி அரசுக்கு பாதகம் ஏற்படும் என்பதால் மத்தியில் ஆளும் ஒன்றிய அரசு, இவ்வழக்கை கிடப்பில் போட்டுவிடும் என அரசியல் முக்கிய புள்ளிகள் கருதுகின்றனர்.
