டேராடூன்: உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரான காங்கிரசின் ஹரீஷ் ராவத் நேற்று தனது ஆதரவாளர்களுடன் டேராடூனில் உள்ள நேரு காலனி காவல் நிலையத்திற்கு சென்று, தன்னை தவறாக சித்தரித்து சமூக ஊடகத்தில் பாஜ சார்பில் ஏஐ வீடியோ பரப்பப்பட்டு வருவதாக புகார் அளித்தார். அது தொடர்பாக பென் டிரைவ் உள்ளிட்ட ஆதாரங்களையும் வழங்கினார். இதுதொடர்பாக போலீசார் தகவல் தொழில்நுட்ப திருத்த சட்டம் 2008ன் கீழ் எப்ஐஆர் பதிவு செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த ஹரீஷ் ராவத், ‘‘4 மணி நேரம் போராடிய பிறகுதான் எனது புகார் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தனர். பாஜவினருக்கு எதிரான புகார் என்பதால் அதை பதிய போலீசாரின் கைகள் நடுங்கின. ஆதாரங்களுடன் புகார் கொடுத்த முன்னாள் முதல்வருக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலையை யோசித்து பாருங்கள். எனது புகார் தொடர்பாக காவல்துறை குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் என நம்புகிறேன்’’ என்றார்.
