×

கேரளாவில் கொச்சி அருகே 3 டாக்டர்கள் சேர்ந்து நடுரோட்டில் அறுவை சிகிச்சை செய்த வாலிபர் சிகிச்சைபலனின்றி பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் லினு (40). கொச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 2 நாட்களுக்கு முன் இரவு கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக பைக்கில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். உதயம்பேரூர் என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த இன்னொரு பைக் மீது அவரது பைக் மோதியது. இதில் லினு கீழே விழுந்து படுகாயமடைந்தார். இந்த சமயத்தில் அந்த வழியாக காரில் வந்த கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் இதய அறுவை சிகிச்சை நிபுணரான மனூப் மற்றும் கொச்சி இந்திரா காந்தி கூட்டுறவு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் தம்பதிகளான தாமஸ் பீட்டர், திதியா ஆகியோர் உடனடியாக லினுவை பரிசோதித்தனர். நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாலும் விபத்தின்போது நுரையீரலுக்குள் மண் புகுந்ததாலும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படத் தொடங்கியது. சிறிது நேரத்திலேயே அவர் மயக்கமடைந்தார். உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் உடல்நிலை மோசமாகும் சூழல் உருவானது.

அதைத்தொடர்ந்து 3 டாக்டர்களும் சேர்ந்து லினுவுக்கு ரோட்டில் வைத்தே செல்போன் வெளிச்சத்தில் தங்களிடம் இருந்த பிளேடு, சிறிய உபகரணங்களை பயன்படுத்தி அறுவை சிகிச்சையை தொடங்கினர். கழுத்தில் சிறிய துளை போட்டு ஒரு ஸ்ட்ராவை பயன்படுத்தி லினுவுக்கு மூச்சு விட வசதி ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து லினு ஆம்புலன்சில் ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார். கொச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லினுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விபத்தில் படுகாயமடைந்த வாலிபருக்கு நடுரோட்டில் அறுவை சிகிச்சை செய்த 3 டாக்டர்களையும் பலரும் பாராட்டினர். இதற்கிடையே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த லினு நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Tags : Kochi ,Kerala ,Thiruvananthapuram ,Linu ,Kollam, Kerala ,Christmas ,Udayamberur ,
× RELATED இந்தியாவின் 2 புதிய விமான...