புதுடெல்லி: ஆரவல்லியில் புதிய சுரங்க குத்தகைகள் வழங்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், “ஆரவல்லி மலைத்தொடர் முழுவதும் புதிய சுரங்க குத்தகைகள் வழங்க முழுமையான தடை விதிக்குமாறு மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சுரங்கம் தோண்டுவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மேல் தடை செய்யப்பட வேண்டிய கூடுதல் பகுதிகள் மற்றும் மண்டலங்களை கண்டறிய வேண்டும். டெல்லி முதல் குஜராத் வரை பரவி உள்ள ஆரவல்லி மலைத்தொடர் முழுவதும் புதிய சுரங்க குத்தகைக்கான விண்ணப்பங்களை மாநில அரசுகள் பரிசீலிக்கவோ, இறுதி செய்யவோ கூடாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான சுரங்க நடைமுறைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக நடந்து கொண்டுள்ள சுரங்க நடவடிக்கைகள், கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கடுமையாக கட்டுப்படுத்தப்பட ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
