- கவர்னர்
- முதல் அமைச்சர்
- புதுச்சேரி
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா
- சித்தன்குடி
- புதுச்சேரி சமூக நலத்துறை
புதுச்சேரி, டிச. 24: புதுவையில் நடந்த விழாவில் கவர்னர், முதல்வர் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா நேற்று சித்தன்குடியில் நடந்தது. இவ்விழாவின் துவக்கத்தில் மாற்றுத்திறனாளிகளின் குறைகள், நிறைகள் மற்றும் கோரிக்கைகளை பற்றி பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, வேலாயுதம் என்ற மாற்றுத்திறனாளி மேடையில் பேசும்போது, அரசு பல திட்டங்களை செயல்படுத்தி நிதியை வீணடிக்கிறது. அதிக நாட்கள் முதல்வராக ரங்கசாமி இருந்துள்ளார். ஆனால், அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு எதுவும் செய்யவில்லை என பேசினார்.
அப்போது, விழாவில் பங்கேற்ற ராஜா என்ற மாற்றுத்திறனாளி குறுக்கிட்டு, முதல்வர் ரங்கசாமி என்னென்ன திட்டங்களை செயல்படுத்தி உள்ளார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒவ்வொரு முறையும் அரசு விழாவில் இப்படி பேசி பெயர் எடுக்கலாம் என்று பார்க்கிறீர்கள். தொடர்ந்து இதேபோல் செயல்பட்டால் உங்களை தொலைத்து விடுவேன் என்று ஆவேசத்துடன் எச்சரித்தார். இதனால் இருவருக்கும் இடையே 5 நிமிடங்கள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு, சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அமர வைத்தனர். புதுவையில் கவர்னர், முதல்வர் முன்னிலையில் அரசு விழாவில் இரண்டு மாற்றுத்திறனாளிகள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
