புளியங்குடி, டிச.24: புளியங்குடியை அடுத்த வெள்ளக்கவுண்டம்பட்டி மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் கனகராஜ் (20). இவர் புளியங்குடி மனோ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு ஆங்கிலம் படித்து வருகிறார். இவர் நேற்று காலை தனது பைக்கில் சிந்தாமணியில் உள்ள பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு கல்லூரிக்கு சென்றார். அப்போது கட்டிட வேலைகளுக்காக பொருட்கள் எடுத்து வந்த சிந்தாமணி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த சீனிராஜ் மகன் மணிகண்டன்(40), முத்து மகன் சிவனேஷ்(18) ஆகியோர் வந்த பைக்கும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் மணிகண்டன், சிவனேஷை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவர் கனகராஜிக்கு புளியங்குடி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புளியங்குடி இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர், எஸ்ஐ பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
