கரூர், டிச. 23: கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை ஆணையர் கே.எம் சுதா உத்தரவுப்படி அதிரடியாக அகறப்பட்டது. கரூர் திருமாநிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் ரூ.40 கோடியில் அதிநவீன வசதியுடன் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 82 கடைகள் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டன. கடைகள் அமைக்கும் பொழுது மக்களுக்கு இடையே இல்லாதவாறு அரசின் விதிமுறைக்கு உட்பட்டு கடைகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு சில கடைகளுக்கு முன்பாக கடை உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு இடையே தடுப்புகள், இருக்கைகள், கடைகளுக்கு பயன்படுத்தக்கூடிய உதிரிப்பொருட்கள், மூலப்பொருள்கள் கடைகள் முன்பு வைத்து பொதுமக்களுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தினர். தகவலறிந்த மாநகராட்சி ஆணையர் கே .எம்.சுதா, நகர் நல அலுவலர் ராஜலட்சுமி, சுகாதார ஆய்வாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலையில் கடைகளுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த விளம்பர கோடுகள் தட்டிகள் பாத்திரங்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிவருவது மக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
