டாக்கா: வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு மாணவர் போராட்டம் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதைத் தொடர்ந்து, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியில் உள்ளது. வரும் பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், மாணவர் போராட்டத்தின் மூலம் பிரபலமான இன்குலாப் மஞ்ச் மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.
இதனால் வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில், மாணவர் போராட்டத்தில் ஹாதிக்கு அடுத்தபடியாக 2ம் கட்ட இளைஞர் தலைவராக இருந்த தேசிய குடிமக்கள் கட்சியின் குல்னா பிரிவு தலைவரும், கட்சியின் தொழிலாளர் முன்னணியின் மத்திய ஒருங்கிணைப்பாளரான மொட்டலேப் ஷிக்தர் குல்னாவில் நேற்று மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். தலையின் இடது பக்கத்தில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட ஷிக்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கு விசா சேவையை நிறுத்தியது வங்கதேசம்: வங்கதேசத்தில் நிலவும் பதற்றம் காரணமாக விசா சேவையை நிறுத்திய இந்தியாவுக்கு பதிலடியாக இந்தியாவுக்கான விசா சேவையையும் நிறுத்துவதாக வங்கதேசம் நேற்று அறிவித்தது. டெல்லியில் உள்ள தூதரக மற்றும் விசா சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வங்கதேச உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்துக்கள் போராட்டம்
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை தடுக்க இடைக்கால அரசு தவறியதைக் கண்டித்து சிறுபான்மையினர்களான இந்துக்கள் டாக்காவில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
