×

மீண்டும் தலைவிரித்தாடும் வன்முறை: வங்கதேசத்தில் நடப்பது என்ன..? இந்தியாவுக்கு எதிராக போராட தூண்டும் அடிப்படைவாத சக்திகள்

வங்கதேசம் மீண்டும் வன்முறை களமாக மாறி தகிக்கிறது. கடந்த 2024 ஜூலை மாதம் முதல் வன்முறையோடு வாழ பழகிவிட்டனர் வங்க தேச மக்கள். ஆனால், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடந்து அமைதி திரும்பும் என்று நம்பிக்கொண்டிருந்த மக்கள் ஆசையில் மண் விழுந்திருக்கிறது.

வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பங்களுக்கு இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்ற நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக கடந்த 2024 ஜூலையில் இளைஞர்கள் போராட துவங்கினர். அதை அந்நாட்டு பிரதமரான இருந்து ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு ஒடுக்க முயற்சிக்க உயிர்பலிகள் அதிகரித்தது. இது இளைஞர்களை இன்னமும் ஆக்ரோஷப்படுத்த போராட்டம் தீவிரமடைந்து ஷேக் ஹசீனாவின் ஆட்சியையே காவு வாங்கியது. ஷேக் ஹசீனா 2024 ஆகஸ்டில் தப்பி ஓடி இந்தியாவில் தஞ்சம் புக அங்கு நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு கடந்த ஓராண்டுக்கும் மேலாக வங்க தேசத்தை நிர்வகித்து வருகிறது. வரும் பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அரங்கேறி வரும் வன்முறை சம்பவங்கள், அதிலும் இந்தியாவை, இந்துக்களை குறிவைத்து நடக்கும் வெறியாட்டம் அந்த நாட்டின் சரித்திரத்தையே புரட்டி போடும் நிலையை உருவாகி உள்ளது.

1971ல் பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெற்று தனி நாடாக வங்க தேசம் பிரகடனம் செய்யப்பட்டதும், வங்கதேசம், பாகிஸ்தான் இடையேயான போர் துவங்கி 8 மாதங்கள் நீடித்தது. இதில், வங்கதேசத்துக்கு ஆதரவாக இந்திய முப்படைகளை களமிறக்கி பாகிஸ்தான் படைகளை வீழ்த்தினார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. டிசம்பர் 16ஆம் தேதி போர் முடிந்து வங்கதேசத்தில் இருந்து மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பியது பாகிஸதான். அப்போது, இந்தியாவை வங்க தேசத்தினர் ஒரணியில் நின்று வாழ்த்தியது வரலாறு.

ஆனால், அரை நூற்றாண்டு காலத்துக்கு பிறகு அதே வங்கதேசம், இந்தியாவுக்கு எதிராக திரும்பும் என்று யாராலும் கணித்திருக்க முடியாது. ஷேக் ஹசீனா ஆட்சிக்காலம் வரை இந்தியாவுக்கும், வங்க தேசத்துக்கு இடையே இணக்கமான நல்லுறவுதான். ஆனால், இந்தியாவுக்கு எதிரான வன்மம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இடைக்கால ஆட்சியாளர்களால் தூண்டப்பட்டு வந்ததை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவை எதிரியாக பார்க்கத் துவங்கிய முகமது யூனுஸ் அரசு, அத்தோடு நிற்காமல் சீனாவோடு மட்டுமல்லாமல் ஜென்ம விரோதியான பாகிஸ்தானுடனும் கை கோர்த்த அவலம் நடந்தது. ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்குகளில் அடுத்ததடுத்து மரண தண்டனைகள் வரை அறிவிக்கப்பட அவரை நாடு கடத்தி தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவை வற்புறுத்தி வந்தது இடைக்கால வங்கதேச அரசு. இதற்கு இந்தியா மறுக்கவே, இந்தியாவுக்கு எதிரான மன நிலை வங்கதேச மக்களிடையே பரப்பப்பட்டது.

ஷெரீஃப் உஸ்மான் ஹாதி என்ற 32 வயது போராட்டக்குழு தலைவனின் படுகொலைதான் இப்போது நடக்கும் போராட்டத்துக்கு தொடக்கப் புள்ளி. கடந்த ஆண்டு நடந்த மாணவர் போராட்டங்களின் மூலம் திடீர் தலைவரானவர்தான் இந்த ஷெரீப் உஸ்மான் ஹாதி. தீவிரவாத அமைப்பு என்று முத்திரை குத்தப்பட்ட புரட்சிகர தளம் என்று பொருள்படும் இன்கிலாப் மஞ்சா அமைப்பின் செய்தித் தொடர்பாளர். இந்தியாவுக்கு எதிராக வெளிப்படையாக பிரசாரம் செய்வதையே வாடிக்கையாக கொண்ட ஹாடி வங்க தேசத்தின் இறையாண்மையை காப்பதற்காகவே தனனை அர்ப்பணித்துக் கொண்டதாக பிரசாரம் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி தலைநகர் டாக்காவில் ரிக்ஷாவில் சென்ற ஹாதியை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டனர். பலத்த காயம் அடைந்த அவர், சிங்கப்பூருக்கு தனிவிமானத்தில் கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், 18ம் தேதி ஹாதி உயிரிழந்தார்.

ஹாதியின் மரணச் செய்தி வங்கதேசம் முழுவதும் காட்டுத்தீ போல பரவி வன்முறையை தூண்டியது. தாக்குதல் நடத்தியவர்கள் ஷேக் ஹசீனாவின் கட்சியை சேர்ந்தவர்கள் என்ற தகவலோடு அவர்கள் இந்தியாவுக்கு தப்பி ஓடிவிட்டார்கள் என்ற செய்தியும் பரவ, ஹாதி மரணத்துக்கு எதிரான போராட்டம் இந்தியாவுக்கு எதிரான போராட்டமாகவே மாறிப்போனது. போராட்டக் களத்தில் இன்குலாப் மஞ்சா, ஜூலை புரட்சிகர கூட்டணி மற்றும் வங்காளதேச தனியார் பல்கலைக்கழக மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் முன்னணயில் உள்ளது. வங்கதேசத்தில், இந்திய் தூதரகம், துணை தூதரகங்கள் முற்றுகையிடப்பட்டன. இந்தியாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாக கூறி வங்கதேச பத்திரிகை அலுவலகங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய வங்கதேச இடைக்கால அரசு, தன் பங்கிற்கு இந்தியாவின் தூதருக்கு சம்மன் அனுப்பி ஹாதியின் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்ய ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் வைத்து போராட்டம் தீவிரமடைய காரணமாக இருந்தது.

வங்க தேசத்தின் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரித்த இந்தியா, டெல்லியிலுள்ள வங்கதேச தூதரை அழைத்து, கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. ஆனாலும் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. அத்தோடு, அந்நாட்டில் சிறுபான்மையினரான இந்து ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். “அல்லாஹு அக்பர்” “டெல்லியா டாக்காவா” மற்றும் “டாக்கா டாக்காதான்” என்று முழக்கங்கள் வங்கதேச போராட்டக்களத்தில் எதிரொலிக்கின்றன. இன்கிலாப் மஞ்சாவின் முகநூல் பக்கத்திலும் , இந்திய மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில், அல்லா மாபெரும் புரட்சியாளர் உஸ்மான் ஹாதியை அல்லா ஒரு தியாகியாக ஏற்றுக்கொண்டான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசம் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடாக இருந்தபோதும், இதுவரை அடிப்படைவாத மதவாத கட்சிகள் இதுவரை 5 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை பெற்றதில்லை என்பத வரலாறு. ஆனால், இந்த இன்றைய வங்க தேச அரசியல் சூழலில் இஸ்லாமிய அடிப்படைவாத கட்சிகளின் கை ஓங்கி உள்ளது. சட்டம், ஒழுங்கு அமைதி மாயமாகி, அராஜகம் தலைவிரித்தாடுகிறது. ஜனநாயகம் வீழந்துவி்டது. கெட்டது எது நடந்தாலும் இந்தியாதான் பொறுப்பு என்ற பிரசாரத்தை அரசியல் கட்சிகள், அடிப்படைவாத அமைப்புகள் பரப்புகின்றன. அதை நம்பி போராட்டக்களத்தில் பொது மக்களும் களமிறங்கி வன்முறையில் ஈடுபடுகிறார்கள். வங்கதேச விடுதலைப் போருக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இருந்ததாகக் குற்றம் சாட்டப்படும் ஜமாத்-இ-இஸ்லாமி, இப்போது முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது.

ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளி்ட்ட தீவிரவாத முஸ்லிம் கட்சிகளுக்குக் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை தற்போதைய வங்க தேச இடைக்கால அரசு வழங்கியுள்ளது. அதே நேரத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் உள்ளிட்ட முற்போக்கு மற்றும் ஜனநாயக கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.முறைகேடாக ஒரு தேர்தலை நடத்தி, தீவிரவாதிகளின் கையில் ஆட்சியை ஒப்படைக்க முகமது யூனுஸ் முயற்சி செய்வதாக சர்வதேச பார்வையாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அண்டை நாடான வங்கதேசத்தில் இப்படி ஒரு அமைதியற்ற நிலை நிலவுவது இந்தியாவுக்கு மட்டுமல்ல, தெற்காசிய அமைதிக்கும் நல்லதல்ல. அதிலும், இந்தியாவுக்கு எதிரான வெறுப்பு மனநிலை அண்டை நாட்டு மக்களிடையே பரவுவது சரியல்ல. நேர்மையான முறையில் வங்க தேசத்தில் தேர்தல் நடந்து அங்கு மக்களாட்சி மலர்ந்தால் அமைதி திரும்புவது சாத்தியமானது. மத அடிப்படைவாதிகளிடம் வங்கதேசம் சிக்கிக்கொண்டால், பாகிஸ்தான் போல் என்றைக்கும் இந்தியாவுக்கு தலைவலிதான்.

இந்தியாவுக்கு எதிரான சக்திகளை ஒடுக்கிய ஷேக்ஹசீனா
வங்கதேசத்தில் எப்போதுமே இந்தியாவுக்கு எதிரான ஒரு கோஷ்டி இருக்கும். ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் இந்த கோஷ்டிகள் அடக்கி, ஒடுக்கப்பட்டு வைக்கப்பட்டது. இப்போது, ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கும் இந்த அமைப்புகள்தான் காரணம். அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்தபிறகு அந்த அமைப்புகளின் செல்வாக்கு தற்போதைய இடைக்கால ஆட்சியின் ஆதரவோடு பல்கி பெருகி உள்ளது.

‘அகண்ட வங்கதேசம்’
சுடப்பட்டதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு, ஹாதி தனது முகநூலில்,“அகண்ட வங்கதேசம்” என்று இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய வங்கதேசத்தின் புதிய வரைபடத்தைப் பகிர்ந்திருந்தார். இந்த அகண்ட வங்கதேசம் 1947ல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் வங்காளத்தின் கடைசி பிரதமராக இருந்த ஹுசைன் ஷஹீத் சுஹ்ராவர்த்தி முன்மொழிந்து தோல்வி அடைந்த திட்டமே. வங்கதேசத்தில் எந்தவொரு பெரிய அரசியல் கட்சியும் ஆதரிக்காத இந்த யோசனையை சில இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் மட்டும் ஆதரிக்கின்றன. ஆனால், இளைஞர்கள் போராட்டத்தில் தன்னை ஒரு தலைவனாக மாற்றிக்கொண்ட ஹாதி வங்கதேச மக்களிடம் இந்தியாவுக்கு எதிரான வெறுப்பை வளர்த்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் டாக்கா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு விழாவில் பங்ககேற்ற ஹாதி சர்ச்சைக்குரிய அகண்ட வங்கதேசம் வரைபடத்தை காட்சிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

யார் இந்த ஷெரீப் உஸ்மான் ஹாதி
1994ஆம் ஆண்டு வங்கதேத்தின் ஜலோகதி மாவட்டத்தின் நல்சிட்டி உபசிலாவில், பிறந்தவர் உஸ்மான் ஹாதி. இவரது தந்தை மதரசாவில் ஆசிரியராகவும், இமாமாகவும் இருந்தவர். மதரசா பள்ளியில் பயின்ற ஹாதி ஒரு கவிஞர். இந்தியாவுக்கு எதிரான தீவிர நிலைப்பாடு கொண்டவர். ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர் போராட்டத்தில் ஊடுருவிய ஹாதி அதன் தலைவர்களில் ஒருவராக உருவாகினார். பின்னர் அதை பயன்படுத்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்து இருந்தார். அவர், மூத்த தலைவராக செயல்பட்ட இன்கிலாப் மஞ்சா அமைப்பு, ஒரு தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், ஹாடி டாக்கா-8 தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக பிரச்சாரம் செய்து வந்தார்.32 வயதான ஹாதிக்கு மனைவியும்,10 மாத குழந்தையும் உள்ளது. ஹாதியின் மரணத்தைத் தொடர்ந்து, வங்கதேச இடைக்காலத் தலைவரான முகமது யூனுஸ், ஒரு நாள் தேசிய துக்க தினத்தை அறிவித்தார். அரசு, அரசு ஆதரவு, தனியார் கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள வங்கதேச தூதரகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

Tags : Bangladesh ,India ,
× RELATED மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பு: ரஷ்யாவின் ராணுவ தளபதி உயிரிழப்பு