திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் தர்காவுக்கு செல்ல பக்தர்களுக்கு நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரிய விவகாரம் தொடர்பாக, மலைக்கு செல்ல கடந்த டிச.3ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகம், அலுவலகம், சரவணப்பொய்கை மற்றும் மலை மீது செல்வதற்கான பழநியாண்டவர் மலைப்பாதையிலும் பேரிகார்டுகள் வைக்கப்பட்டு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கடந்த 17ம் தேதி திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் ஜீவஜோதி தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் நேற்று முன்தினம் நடைபெற்ற சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் சந்தன கூடு கொடியேற்ற விழாவிற்காக மலைக்கு மேல் கொடி கொண்டு செல்ல மட்டும் சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டது. பக்தர்களின் கோரிக்கையை தொடர்ந்து, நேற்று முதல் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் தர்கா ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மலைக்கு செல்லும் பக்தர்கள், போலீசாரிடம் தங்கள் ஆதார் அடையாள அட்டையை காண்பித்து பதிவு செய்த பின்னரே மலையேற அனுமதிக்கப்படுவர். மேலும் பக்தர்கள் மலைக்கு மேலே வீடியோ, போட்டோ எடுக்கக்கூடாது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி. 6 மணிக்குள் கீழே இறங்கி விட வேண்டும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலைக்கு செல்ல அனுமதி வழங்கியதை தொடர்ந்து, பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
