*உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை
ஈரோடு : ஈரோடு அடுத்த சித்தோடு அருகேயுள்ள கரட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் முலாம் பழம் சாகுபடி செய்திருந்தனர். இந்த பழம் அதிக நீர்ச்சத்து வகையை கொண்ட பழமாகும். இதனால் கோடை காலத்தில் சாப்பிடும்போது உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. இந்த பழ வகைகளில் ஏ, சி வைட்டமின்கள் உள்ளது. சீனா, துருக்கிக்கு அடுத்தபடியாக முலாம் பழங்கள் சாகுபடியில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
இந்த முலாம் பழம் விதை போட்டு செடி உற்பத்தி செய்து பின் நடவு நட்டு, பாத்திகளில் பிளாஸ்டிக் கவர் போட்டு மூடி விடுகின்றனர். இதனால் களை வளருவது தடுக்கப்படுவதுடன், பழங்கள் நீரில் நனையாமல் பாதுகாக்கப்படும். மேலும், முலாம் பழம் செடி நட்ட 55 நாட்களில் பழங்களை அறுவடை செய்யலாம். இந்நிலையில், கரட்டுப்பாளையம் பகுதிகளில் முலாம்பழங்கள் அறுவடை செய்து, கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
கடந்தாண்டு ஒரு ஏக்கருக்கு 16 டன் முதல் 22 டன் வரை விளைச்சல் இருந்தது. அதேபோன்று, ஒரு டன் ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை இருந்தது. ஆனால், இந்தாண்டு பழ உற்பத்தியும் குறைந்துள்ளது. அதாவது ஒரு ஏக்கருக்கு 10 டன் முதல் 12 டன் பழம் தான் அறுவடை செய்ய முடிந்தது. இதனால், உரிய விலை கிடைக்காமல் குறைந்த விலையே கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
