- ஜோலார்பேட்டை ரயில் நிலையம்
- ஜோலார்பேட்டை
- ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டம்
- கர்நாடகா, ஆந்திரா, கேரளா…
*பொதுப்பெட்டியில் இடம் கிடைக்காமல் அவதி
ஜோலார்பேட்டை : விடுமுறை காரணமாக ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் பொதுப்பெட்டியில் இடம் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகினர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள ரயில் நிலையம் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை இணைக்கும் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இதனால், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கும் செல்லும் பயணிகள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
குறிப்பாக, விடுமுறை நாட்களுக்கு முன்பு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏலகிரி மலைக்கு சுற்றுலா வருகின்றனர். இதனால் விடுமுறை நாட்களில் ரயில் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் எப்போதும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று விடுமுறை முடிந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது.
மேலும், சென்னை, பெங்களூரு, கோவை மற்றும் கேரளா உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள், ரயில் நிலையத்தில் காத்திருந்து பொதுப்பெட்டியில் இடம் கிடைக்காமல் ஓடி சென்று ரயில் படிக்கட்டில் தொங்கியபடி கடும் அவதிக்குள்ளாகி சென்றனர்.
இதுபோன்ற சிரமங்களை தவிர்க்க விடுமுறை நாட்களில் ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களிலும் கூடுதல் பெட்டி இணைக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
